கன்னத்தில் முத்தமிட்டால் படம் 22 ஆண்டுகளைக் கடந்துள்ள நிலையில், அப்படத்தில் தனது கதாபாத்திரம் குறித்து பதிவிட்டுள்ளார் நடிகை சிம்ரன்.


கன்னத்தில் முத்தமிட்டால்


மணிரத்னம் இயக்கத்தில் கடந்த 2002ஆம் ஆண்டு வெளியான படம் கன்னத்தில் முத்தமிட்டால். ஆர். மாதவன், சிம்ரன், பிரகாஷ் ராஜ், நந்திதா தாஸ், பிரகாஷ் ராஜ் ,பசுபதி, பி.எஸ்.கீர்த்தனா உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள். ஏ.ஆர் ரஹ்மான் இந்தப் படத்திற்கு இசையமைத்தார். எழுத்தாளர் சுஜாதா எழுதிய அமுதாவும் அவனும்‘ என்கிற கதையைத் தழுவி இப்படத்தை மணிரத்னம் இயக்கினார். இலங்கையில் நடந்த ஈழப்போரை பின்னணி கதையாக வைத்து உருவான இப்படம், வெளியாகி 22 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இப்படியான நிலையில் நடிகை சிம்ரன் இப்படம் குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


விருதுகள்


டொராண்டோ திரைப்பட விழா மற்றும் சான் ஃபிரான்சிஸ்கோ திரைப்பட விழா என  பல்வேறு சர்வதேசத் திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டது. மேலும் சிறந்த பாடல் வரிகள், சிறந்த பின்னணி இசை, சிறந்த படத்தொகுப்பு என மொத்தம் ஆறு தேசிய விருதுகளை இப்படம் வென்றது. இது தவிர்த்து ஃபிலிம்ஃபேர் விருது, ஏழு தமிழ்நாடு மாநில விருதுகளையும் இப்படம் வென்றது. 


இந்திராவாக சிம்ரன்


சுஜாதாவின் ‘அமுதாவும் அவனும்‘ கதை ஒரு தந்தைக்கும் மகளுக்குமான உறவை முன்னிலைப்படுத்தும் வகையில் எழுதப்பட்டது. படத்தில் அமுதாவுக்கும் மாதவனுக்குமான உறவு அனைவரையும் கவர்ந்திருந்தது. ஆனால் இப்படத்தில் இந்திராவாக நடித்த சிம்ரனின் கதாபாத்திரம் உணர்வுரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கதாபாத்திரம்.


தனது உண்மையான அம்மாவை அமுதா தேடுகையில், அவளுக்காக ஏங்குகையில் இந்திரா (சிம்ரன்) மனதில் ஏற்படும் உணர்வு நிலைகளை நம்மால் புரிந்துகொள்ள முடியும். தனது பலமான கிளாமர், நடனம் என எல்லாவற்றையும் கைவிட்டு மூன்று குழந்தைகளுக்கும் அம்மாவாக சிம்ரன் இந்தக் கதாபாத்திரத்தில் அவ்வளவு சிறப்பாக நடித்திருந்தார். 


நூலிழையில் மிஸ்ஸான தேசிய விருது!






ஒட்டுமொத்த படக்குழுவுக்கும் தேசிய விருது கிடைத்த போது, சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய சிம்ரனுக்கு ஏன் விருது கிடைக்கவில்லை என்கிற கேள்வி பரவலாக எழுந்தது. இந்நிலையில், சிம்ரன் இந்தப் படத்தில் தனது கதாபாத்திரத்திற்கு சொந்தக் குரலில் டப்பிங் கொடுக்கவில்லை என்பதே அவருக்கு தேசிய விருது கிடைக்காததற்கான காரணமாகக் கூறப்பட்டது. பிரபல சின்னத்திரை நடிகையும் டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டுமான தீபா வெங்கட் இப்படத்தில் சிம்ரனுக்கு டப்பிங் செய்திருந்தார்.


தேசிய விருது வெல்பவர் சொந்தக் குரலில் டப்பிங் செய்ய வேண்டும் எனும் விதி உள்ள நிலையில், கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் சிறப்பாக நடித்தும் நூலிழையில் சிம்ரன் தேசிய விருதினைத் தவறவிட்டார்.


தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இப்படத்தின் இந்திரா கதாபாத்திரத்தினை தனக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசாக தான் கருதுவதாகக் கூறியுள்ளார்.