இந்த ஒரு காரணத்திற்காக தெலுங்கு சினிமா துறைக்கு தான் எப்போதும் நன்றியுடன் இருப்பேன் என்று நடிகை ஷ்ருதி ஹாசன் தெரிவித்துள்ளார்.
ஷ்ருதி ஹாசன்
நடிகை ஷ்ருதி ஹாசன் இயக்கத்தில் உருவான ’இனிமேல்’ பாடல் சமீபத்தில் வெளியானது. இந்தப் பாடலில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அவருடன் நடித்திருந்தார். கமல்ஹாசன் பாடல் வரிகளை எழுத, இந்தப் பாடலை தயாரித்தும் இருந்தார். இந்நிலையில் கோலிவுட் சினிமாவுக்கு மிக நீண்ட கால இடைவெளிக்குப் பிறகு மீண்டும் வருகை தந்துள்ளார் ஷ்ருதி ஹாசன். கடந்த ஆண்டு பிரபாஸ் நடிப்பில் வெளியான சலார் படத்தில் நடித்த ஷ்ருதி ஹாசன், தற்போது தெலுங்கில் ‘டகோய்ட்’ என்கிற படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், சினிமாவில் நடிக்க வந்தபோது தெலுங்கு சினிமாவில் தான் நடித்த ‘கப்பர் சிங்’ படம் எப்படி மிகப்பெரிய ஓப்பனிங்காக இருந்தது என்று ஷ்ருதி ஹாசன் பகிர்ந்துகொண்டார்.
ஓவர் நைட்டில் வாழ்க்கையே மாறிவிட்டது!
முருகதாஸ் இயக்கிய 7 ஆம் அறிவு படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானார் ஷ்ருதி ஹாசன். இதனைத் தொடர்ந்து தனுஷுடன் 3 படத்தில் நடித்தார். 3 படத்தைத் தொடர்ந்து அடுத்தபடியாக என்ன செய்வது என்று தெளிவில்லாமல் தான் இருந்ததாகவும், அப்போது தான் தெலுங்கு சினிமாவில் தான் நடித்த கப்பர் சிங் படம் தனக்கு மிகப்பெரிய ஓப்பனிங் கொடுத்ததாக தனியார் ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியுள்ளார்.
“3 படத்துக்குப் பிறகு ஷ்ருதி ஹாசன் அடுத்து என்ன செய்ய போகிறார் என்கிற கேள்வி அனைவரிடமும் இருந்தது. அப்போது ஹரிஷ் ஷங்கர் இயக்கத்தில் பவன் கல்யாணுடன் நான் நடித்த கப்பர் சிங் என் வாழ்க்கையை ஓவர் நைட்டில் மாற்றியது.
அந்தப் படம் மிகப்பெரிய வெற்றி அடைந்ததைத் தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் அடுத்தடுத்த வாய்ப்புகள் வரத் தொடங்கின. ஒரே நேரத்தில் என்டர்டெயின்மெண்டான படங்களும், அதே நேரத்தில் நடிப்புக்கு ஸ்கோப் இருந்த கதைகளும் எனக்கு வந்தன. ஒரு பக்கம் ரேஸ் குர்ரம் மாதிரியான படங்களும், மறு பக்கம் ஸ்ரீமந்துடு மாதிரியான படங்களிலும் நான் நடிக்க ஆரம்பித்தேன்.
“வாழ்க்கை முழுவதும் நன்றியுடன் இருப்பேன்”
யாராக இருந்தாலும் எங்க வாய்ப்புகள் இருக்கோ, அங்கதான் நாம் போவோம். நம்மை எந்த இடத்தில் ஏற்றுக்கொள்கிறார்களோ அங்கு தான் நாம் நிறைய நேரத்தை செலவிடுவோம். என் வாழ்க்கை முழுவதும் நான் தெலுங்கு சினிமாவுக்கு நன்றியுடன் இருப்பேன்“ என்று ஷ்ருதி ஹாசன் தெரிவித்துள்ளார்.
ஷ்ருதி ஹாசனின் நடிப்பு ரசிகர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளன. பிரேமம் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் சாய் பல்லவி நடித்த மலர் கதாபாத்திரத்தில் அவர் நடித்தபோதும் இந்த விமர்சனங்கள் தொடர்ந்தன. நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் அடுத்தடுத்த படங்களில் தற்போது நடித்து வரும் ஷ்ருதி ஹாசனை இந்த முறை ரசிகர்கள் அவரை வரவேற்பார்கள் என்று எதிர்பார்க்கலாம்.