திரௌபதி படத்தில் நடித்தது கெட்ட கனவாக இருப்பதாக நடிகை ஷீலா ராஜ்குமார் தெரிவித்துள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது. 


கடந்த 2020 ஆம் ஆண்டு மோகன் ஜி இயக்கத்தில் நடிகர் ரிச்சர்ட் ரிஷி நடிப்பில் வெளியான படம் “திரௌபதி”. இந்த படத்தில் ஹீரோயினாக ஷீலா ராஜ்குமார் நடித்திருந்தார். நாடக காதலுக்கு எதிரான கதை பின்னணி கொண்ட இப்படம் குறிப்பிட்ட ஒரு சமூகத்தினருக்கு ஆதரவாக இருப்பதாக கூறி விமர்சனம் செய்யப்பட்டது. அதேசமயம் இதுவே விமர்சனங்களே படத்திற்கு மிகப்பெரிய பலமாகவும் அமைந்தது. 






இதனைத் தொடர்ந்து மோகன் ஜி அடுத்ததாக ருத்ர தாண்டவம் என்ற படத்தை எடுத்தார். இதில் குறிப்பிட்ட ஒரு அரசியல் தலைவரை நேரடியாக தாக்குவது போன்ற காட்சிகள் இடம் பெற்று சர்ச்சையை கிளப்பியது. தற்போது அவர் நடிகர் நட்டி, இயக்குநர் செல்வராகவன் ஆகியோரை வைத்து பகாசூரன் என்ற படத்தை இயக்கியுள்ளார். இதனிடையே கடந்தாண்டு ஷீலா நடுக்கடலில் படகு ஒன்றில் ஒருவருடன் மாலையுடன் இருக்கும் புகைப்படம் வெளியானது. அவர் திருமணம் செய்து கொண்டாரா என பலரும் கேள்வியெழுப்பிய நிலையில் தனக்கு 2014 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்று விட்டதாகவும், இது பழைய புகைப்படம் எனவும் ஷீலா விளக்கமளித்தார். 


இதனைத் தொடர்ந்து மண்டேலா படத்தில் நடித்து பாராட்டை பெற்ற அவர், தற்போது பர்முடா, மாயத்திரை, ஜோதி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் பிரபல ஊடகத்திற்கு சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்று சினிமா ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தொகுப்பாளர் தொடர்ந்து சமூக அக்கறையுள்ள கேரக்டரில் நடித்து வருகிறீர்கள். ஆனால் திரௌபதி படத்தில் நடித்த போது அது பாசிட்டிவ், நெகட்டிவ் விமர்சனங்களைப் பெற்றது. உங்களை பொறுத்தவரை திரௌபதி படம் சமூக அக்கறையுள்ள படமா என கேள்வியெழுப்புகிறார். 


அதற்கு ஷீலா, ’’இப்ப வரைக்கும் அப்படத்தில் நடித்தது கெட்ட கனவாகவே உள்ளது. ஏனென்றால் எனக்கு முழுக் கதையும் சொல்லப்படவில்லை. நான் முன்னர் சொன்னது போல இயக்குநர்கள் வெளிப்படையாக இருந்தால் அன்றைய தினத்தின் முடிவு என் கையில் இருக்கும். காரணம் நானும் அதனால் ஏற்படும் விளைவுகளை எதிர்கொள்ள தயாராவேன். இதுதான் யதார்த்தமான உண்மை. பொதுவாகவே எனக்கு அரசியல் தெரியாது. என்னுடைய வேலையை சரியா பண்ணனும்ன்னு நினைக்கிறேன். 


அதனால் அந்த படத்தில் நடிக்க வேண்டியதா போச்சு.ஆனால் இவங்களுக்கு பிடிச்சிருக்கு..அவங்களுக்கு பிடிக்கல அப்படின்னு சொல்றது எல்லாம் நான் பின்னால் தான் தெரிந்து கொண்டேன். சமூகத்தில் இப்படி ஒரு நிலைமை இருப்பதே எனக்கு தெரியாது. நான் வளர்ந்த விதம் அப்படி.ஹாஸ்டலில் இருந்த போது என்னுடன் படித்த பெண்களின் பின்னணி குறித்து தெரிந்து கொண்டு பழக மாட்டேன். அதனால் எனக்கு இது புதுவிதமாக இருந்தது. ஒரு டைம் தடுக்கி விழுந்துட்டேன். அதிலிருந்து வெளிப்பட்டு இனி நல்ல விஷயமா பண்ணனும்ன்னு நினைக்கிறேன். 


இதனைப் பார்த்த பலரும் இதே ஷீலா தான் திரௌபதி படத்தின் புரொமோஷனுக்காக படத்தின் பெண்கள் வலிமை மிகுந்தவர்களாக காட்டப்பட்டுள்ளதாக கூறி வீடியோ வெளியிட்டார். இப்போது இப்படி மாற்றி மாற்றி பேசுகிறார் என விமர்சித்துள்ளனர். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண