டிவி சீரியல்கள் தற்போது மக்கள் மத்தியில் பெரிதும் கவனம் பெற்று வருகின்றன. அவர்களின் எதிர்பார்ப்பிற்கு ஏற்ப சீரியல்களில் புது முகங்களை அறிமுகப்படுவத்துவது, புதிய திருப்பங்களை கொண்டு வருவது என போட்டிபோட்டுக் கொண்டு சேனல்கள் சீரியல்களின் விறுவிறுப்பை கூட்டி வருகின்றன. அதே நேரம் மக்களிடம் வரவேற்பை பெறாதா சீரியல்களை தடை செய்யவும் சேனல் நிர்வாகங்கள் தயக்கம் காட்டுவதில்லை.
இந்த நிலையில் விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வந்த ‘வைதேகி காத்திருந்தாள்’ சீரியல் நிறுத்தப்படுவதாக சேனல் நிர்வாகம் தெரிவித்திருந்தது. முன்னதாக இந்த சீரியலில் பிரஜின் கதாநாயகனாக நடித்து வந்த நிலையில், அவருக்கு சினிமாவில் அதிக வாய்ப்புகள் வரத்தொடங்கிய நிலையில் அவர் அந்த சீரியலில் இருந்து விலகினார். அதனைத் தொடர்ந்து விஜய் டிவியின் ராஜ பார்வை சீரியலில் நடித்த நடிகர் முன்னா அந்த கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமானார். அவர் நடித்து ஒரு வாரமே ஆன நிலையில் சீரியல் நிறுத்தப்படுவதாக சேனல் அறிவித்தது.
இந்த நிலையில் இதில் நடித்த நடிகை சரண்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நெகிழ்ச்சியான பதிவை வெளியிட்டிருக்கிறார்.
நெகிழ்ச்சி பதிவு
அவர் பதிவிட்டிருக்கும் பதிவில், “ கடினமான நேரங்களில் அமைதியை தேர்ந்தெடுக்க வேண்டும். இந்த கடினமான நேரங்களில் என்னுடம் நிற்கும் உங்கள் ஒவ்வொருவருக்கும் என்னுடைய நன்றி. என்ன நடக்கிறது என்று தெரியாமல், ஒருவரது உழைப்பை கருத்தில் கொள்ளாமல், திடிரென்று சிலர் ஒரு முடிவிற்கு வந்து விடுகிறார்கள். அவர்களுக்கு நான் ஒன்றும் சொல்ல வில்லை. குட் லக்.
இது நிச்சயம் என்னை உடைத்திருக்கலாம். ஆனால் அழிக்காது .. மீண்டும் நான் வலிமையோடு வருவேன்.
இதற்கு பதிலளித்த ஆர்யன், “ ஆத்மா இருண்ட நாட்களை சந்திக்கும் போதுதான், பிரகாசமாக ஒளிரும்” என்று பதிவிட்டுள்ளார்.