80ஸ் முன்னணி ஹீரோயின்களில் ஒருவராக தமிழ் சினிமாவின் குத்துவிளக்காக விளங்கியவர் நடிகை சீதா. ஆண்பாவம் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். அந்த காலகட்டங்களில் மிகவும் பிஸியாக நடித்து வந்த சீதா ஒரே நாளில் மூன்று ஷிபிட்களில் திரைப்படங்களில் நடித்தவர். ஒரு சில பட வாய்ப்புகளை கால்ஷீட் இல்லாததால் தட்டிக்கழித்த காலங்களும் உண்டு. சமீபத்தில் நடைபெற்ற ஒரு நேர்காணலில் நடிகை சீதா தனது ஆரம்ப காலகட்டங்கள் குறித்து மனம் திறந்து பேசியிருந்தார். 


 



படிப்பை கைவிட்ட காரணம் :


பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டு இருந்த சமயத்தில் ஒரு திருமணத்தில் பார்த்த இயக்குனர் அவரின் வீட்டிற்கே சென்று படத்தில் நடிக்க சொல்லி வற்புறுத்தியுள்ளார். பெற்றோர்களின் விருப்பத்தால் சினிமாவில் நடிக்க ஒப்புதல் கொடுத்த சீதா பள்ளிக்கு செல்ல வேண்டாம், படிக்க வேண்டாம், நிறைய ஐஸ்க்ரீம் கிடைக்கும், எல்லா வேலைகளையும் செய்ய ஆட்கள் இருப்பார்கள், கை நிறைய வளையல்கள் போட்டு கொள்ளலாம் என இப்படி சின்ன சின்ன ஆசைகளுக்காக சினிமாவில் நடிக்க துவங்கியுள்ளார். அதனால் தனது படிப்பை பாதியில் கைவிட்டதை நினைத்து இன்று வருந்துகிறார். 


காதல் திருமணத்தால் ஏற்பட்ட மாற்றம்: 



பார்த்திபன் இயக்கி நடித்த முதல் திரைப்படமான 'புதிய பாதை' படத்தில் நடிக்க சீதா முதலில் மறுத்தாலும் தனது தந்தையின் வற்புறுத்தலால் அப்படத்தில் நடித்துள்ளார். படப்பிடிப்பு நடைபெற்று வந்த சமயத்திலேயே பார்த்திபன் - சீதா இருவருக்கும் இடையில் காதல் மலரவே வீட்டை விட்டு வெளியேறி அவரை திருமணம் செய்துள்ளார்.  அதுவரையில் மிகவும் பிஸியான ஒரு நடிகையாக இருந்து வந்த சீதா திருமணத்திற்கு பிறகு சினிமாவில் நடிப்பதை பார்த்திபன் விரும்பவில்லை. அதனால் நடிப்பதில் இருந்து விலகிய சீதா குடும்பத்தை கவனித்து வந்தார். இரு மகள்கள் இருந்த நிலையில் ஒரு மகனை தத்தெடுத்து வளர்த்து வந்தனர்.


 



அடையாளத்தை இழந்தேன்: 


2001ம் ஆண்டு பார்த்திபன் - சீதா இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் விவாகரத்து பெற்றார். அதற்கு பிறகு சினிமாவில் வாய்ப்புகள் கிடைக்காததால் சின்னத்திரையில் நுழைந்த சீதா, சின்னத்திரை நடிகர் சதீஷ் என்பவரை மறுமணம் செய்து கொண்டார். அந்த திருமணமும் நிலைக்காமல் பாதியில் முடிந்தது. அவரின் கசப்பான கடந்த கால வாழ்க்கை குறித்து மனம் திறந்த சீதா "பெண்களுக்கு அடையாளம் தேவை. அடையாளம் கிடைத்த இடத்தில் இருந்து விலகினால் பின்னர் மீண்டும் அந்த அடையாளத்தை பெறுவது மிகவும் கடினம். சினிமாவில் இருந்து விலகிய பிறகு மீண்டும் என்ட்ரி கொடுப்பது மிகவும் கஷ்டம். இந்த தவறை பலரும் சினிமாவில் செய்துள்ளனர். 


கசப்பான அனுபவம்: 


திருமணத்திற்கு முன்பு நான் எப்படி எல்லாம் இருக்க வேண்டும் என ஆசைபட்டனோ அப்படி இருக்க வேண்டும் என்பதால் தான் சினிமாவில் இருந்து விலகினேன். ஆனால் அது நான் செய்த மிகப்பெரிய தப்பு என்பதை அதற்கு பிறகு தான் உணர்ந்தேன்" என படிப்பை பாதியில் நிறுத்தியது பற்றியும் தனது கசப்பான திருமண வாழ்க்கை குறித்தும் நடிகை சீதா மிகவும் வருத்தத்துடன் பேசியிருந்தார்.