சிவகார்த்திகேயனை பார்க்கும்போது எனக்கு ரஜினியை பார்க்கிற மாதிரியே இருக்கும் என நடிகை சரிதா நேர்காணல் ஒன்றில் கூறியுள்ளார்


கம்பேக் கொடுத்த சரிதா 


சாந்தி டாக்கீஸ் நிறுவனம்  தயாரிப்பில் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘மாவீரன்’. இந்த படத்தில் சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர், சரிதா, இயக்குநர் மிஷ்கின், யோகிபாபு என பலரும் நடித்துள்ளனர்.பரத் சங்கர் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். இந்த படத்தின் மூலம் பல வருடங்களுக்குப் பின் நடிகை சரிதா கம்பேக் கொடுத்துள்ளார்.  இதனிடையே மாவீரன் படத்தின் நடித்தது தொடர்பாக நேர்காணல் ஒன்றில் அவர் கருத்துகளை தெரிவித்துள்ளார். 


மாவீரனில் நடிக்க காரணம் 


”மாவீரன் படத்தின் கதையை இயக்குனர் மடோன் அஸ்வின் என்னிடம் சொன்ன போது மிகவும் சுவாரசியமாக இருந்தது. என்னால் இதில் நடிப்பதற்கு நோ சொல்ல முடியவில்லை. அதே சமயம் நான் இப்படத்தில் நடிப்பதற்கு மற்றொரு காரணம் நடிகர் சிவகார்த்திகேயன். அவரின் வளர்ச்சியை நான் தொடர்ந்து கவனிச்சுக்கிட்டே தான் இருக்கிறேன். அவர் நடித்த படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். இப்படியான நிலையில் மாவீரன் படத்தில் நான் கமிட் ஆன பிறகு எனக்கு கொரோனா வந்துடுச்சு. உடனே அஸ்வினுக்கு போன் பண்ணி என்னுடைய நிலைமையை சொல்லி நான் சரியாக ரொம்ப நாட்கள் ஆகலாம். அதனால் நீங்கள் வேறு யாரையாவது தேர்வு செய்து கொள்ளுங்கள் என தெரிவித்து விட்டேன். 


ஆனால் வேற ஆப்ஷன் என்பதே இல்லை என சொன்ன அஸ்வின், சரிதா மேடம் எப்ப வராங்களோ வரட்டும் இந்த கேரக்டரை அவங்க தான் பண்ணனும் என சிவா சொன்னதாகவும் சொன்னார். மேலும் இந்த படத்தின் தயாரிப்பாளர் அருணின் அம்மா சமீபத்தில் தான் காலமானார். உங்க அம்மாவுக்கு பிடிச்ச நடிகை நான்தான் என சொல்லிக்கிட்டே இருப்பாங்க என கூறினார். இந்த மாதிரி நிறைய விஷயங்கள் மாவீரன் படத்தில் என்னை நடிக்க வைத்தது என சொல்லலாம். எப்போதும் எனக்கு படங்களில் நல்ல நல்ல கேரக்டர்கள் தான் வரும். இந்தப் படத்திலும் அப்படித்தான் அந்த வகையில் நான் பாக்கியசாலி என நினைக்கிறேன். இந்த சமயத்துல நான் என் இயக்குனர் பாலச்சந்தர் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.


 500 மடங்கு அன்பும் மரியாதையும்


மாவீரன் படத்தில் பணி புரிந்த அனைவரும் இளம் வயது உடையவர்கள் என்பதால் அவர்களுடன் பணியாற்றும்போது நானும் இளமையாகி விடுகிறேன். மொத்த டீமும் ரொம்ப கஷ்டப்பட்டுட்டாங்க. அதே சமயம் தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக உள்ள சிவகார்த்திகேயன் ரொம்ப யதார்த்தமா இருந்து தனது உழைப்பை கொடுத்திருக்கிறார். மேலும் இளைஞர்கள் கூட வேலை செய்யும் போது பொதுவாக நாம் எதிர்பார்ப்பது மரியாதை தான். 


மாவீரன் படத்தில் நடித்த போது நான் நினைத்ததை விட 500 மடங்கு அன்பும் மரியாதையும் எனக்கு கிடைத்தது. கிட்டத்தட்ட நாங்கள் அனைவரும் ஒரு குடும்பமாகிட்டோம். எனக்கு மனதுக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது இந்த மாதிரி திரும்பவும் ஒரு டீம் அமையுமா என்று எனக்கு தெரியல அமைஞ்சா நல்லா இருக்கும் என நினைக்கிறேன். இதேபோன்று ஒரு டீமோடு நல்ல கதையும் அமைந்தால் நிச்சயமாக தொடர்ந்து படம் பண்ணுவேன்.


மேலும் சிவகார்த்திகேயன் வளர்ச்சி எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது. அவரின் படங்களில் ரெமோ எனக்கு மிகவும் பிடித்திருந்தது. நான் ரஜினியுடன் நான்கு படங்களில் நடித்திருந்த நிலையில் அவர் எப்படி என்று எனக்கு தெரியும். அதே மாதிரி நிறைய இடங்களில் சிவகார்த்திகேயனை பார்க்கும்போது எனக்கு ரஜினியை பார்க்கிற மாதிரியே இருக்கும்.  அதனால் அவரை நான் குட்டி ரஜினி என செல்லமாக கூப்பிடுவேன்" என்றார்.