சினிமாவில் நீண்ட காலம் நடிக்காமல் இருந்ததற்கான காரணம் என்ன என்பதை நடிகை சரிதா நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். 


கதையே விரும்பும் கதாநாயகி


1970களின் இறுதி காலக்கட்டத்தில் சினிமாவுக்கு நடிக்க வந்தவர்களில் நடிகை சரிதா தனித்துவமானவர். அவரை நடிப்பைப் பற்றிய அப்போதைய காலக்கட்ட ரசிகர்கள் யாரை கேட்டாலும் குறை என்ற ஒன்றை சொல்ல மாட்டார்கள். அந்த அளவுக்கு கதையே விரும்பும் கதாநாயகியாக அசத்தியிருப்பார். அப்படிப்பட்ட சரிதா பல ஆண்டுகள் இடைவெளிக்குப் பின் சினிமாவில் நடிக்க தொடங்கியுள்ளார். 


நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகியுள்ள மாவீரன் படத்தில் அவரது அம்மா கேரக்டரில் சரிதா நடித்துள்ளார். படத்தின் ப்ரோமோஷன் பணிகளிலும் கலந்து கொண்ட சரிதா, ஊடகம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில், நடிப்பில் ஏன் இத்தனை ஆண்டு காலம் இடைவெளி? என்பது பற்றி பேசியுள்ளார். 


சில தியாகங்கள் செய்ய வேண்டி இருந்தது


அவர் தனது உரையில், “சினிமாவில் நீண்ட காலமாக நடிக்காமல் இருந்ததற்கு தாய்மை தான் காரணம். இப்படி ஒரு முடிவை எடுத்தது நான்தான். ஏனென்றால் ஒரு அம்மாவாக எல்லா வேலைகளையும் கடமைகளையும் செய்வதற்கே எனக்கு நேரம் சரியாக இருந்தது. என் வாழ்வின் இந்த நாட்களை நான் மிகவும் ரசித்தேன். எனக்கு சினிமா தான் வாழ்க்கை என்றாலும்,  அம்மாவாக பார்க்கும் போது குழந்தைகளுக்குத்தானே முன்னுரிமை கொடுக்க வேண்டும். அதற்காக சில தியாகங்கள் செய்ய வேண்டி இருந்தது. அதில் ஒன்றுதான் நடிக்காமல் இருந்தது. மற்றபடி தொடர்ந்து டப்பிங் பண்ணிக் கொண்டிருப்பதால் சினிமாவுக்கும் எனக்குமான தொடர்பு விட்டுப் போகவில்லை” என தெரிவித்துள்ளார்.


மேலும், “நான் நடித்த படங்களை எல்லாம் என் பிள்ளைகளுக்கு போட்டுக் காட்டுவேன். அதனைப் பார்த்துவிட்டு, “எல்லா படத்திலும் ஏன் அம்மா சோகமாவே நடிச்சு இருக்கீங்க என நெகிழ்ச்சியடைந்து கேட்பார்கள்.  அதேசமயம், நான் நடிச்ச சில படங்களை நான் இன்னும் பார்க்கவில்லை அதை எல்லாம் பார்க்க வேண்டும் என நினைக்கிறேன் எனவும் சரிதா கூறியுள்ளார். 


தொடர்ந்து ஒரு கேரக்டருக்கு தன்னை தயார்படுத்துவது குறித்து பேசிய சரிதா, “சம்பந்தப்பட்ட கேரக்டருக்கு தனியா ஹோம் ஒர்க் எல்லாம் பண்ண மாட்டேன். அந்த கேரக்டரை புரிந்து கொண்டு சூட்டிங் ஸ்பாட்ல நடிக்கிறது தான். எல்லாத்தையும் கடந்து இயக்குநரும், கூட நடிக்கிற சக நடிகர்களும் கொடுக்கிற ஒரு உந்துதல் தான் நல்லா நடிக்கிறதுக்கு காரணம் என நினைக்கிறேன். நான் திரும்ப நடிக்கப் போறேன் என எங்களோட 80ஸ் நடிகர், நடிகைகள் இருக்கிற வாட்ஸ் அப் குரூப்பில் தெரிவித்தேன். 


எல்லோரும் ரொம்ப சந்தோஷப்பட்டதுடன் வாழ்த்துக்கள் சொன்னாங்க. மாவீரன் படத்தை என் பிரண்ட்ஸ் கூட சேர்ந்து பார்க்கணும் ஆசையா இருக்கு அவங்களோட டைம் கொடுத்து அது நடக்கும் நான் நினைக்கிறேன்” எனத் தெரிவித்தார். குழந்தைகளுக்காக சினிமாவை தியாகம் செய்த சரிதாவின் செயலுக்கு பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.