சாரா அலிகான்
நடிகர் சைஃப் அலிகான் மற்றும் அவரது முதல் மனைவியான அம்ரிதா சிங்க் ஆகிய இருவரின் மகள் சாரா அலி கான். இருவேறு மதத்தைச் சேர்ந்த பெற்றோரைக் கொண்டிருப்பதால் ஹிந்து மற்றும் இஸ்லாமிய கோயில்களுக்கு செல்லும் வழக்கத்தைக் கொண்டிருக்கிறார் சாரா அலி கான்.
கேதர்நாத் படத்தின் மூலம் பாலிவுட் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை சாரா. தொடர்ந்து சிம்பா என்கிற படத்திலும் நடித்திருந்தார். இந்த இரண்டு படங்களும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றன. இதனைத் தொடர்ந்து அவர் நடித்த படங்கள் அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்தன. பின் இயக்குநர் ஆனந்த் எல்.ராய் இயக்கிய ‘அத்ரங்கி ரே’ என்கிற படத்தில் தனுஷுடன் இணைந்து நடித்தார் சாரா. இந்தப் படத்தின் வழியாக தமிழ் ரசிகர்களுக்கும் அறிமுகமானார் சாரா.
விமர்சனங்கள்
ஆன்மீக ஸ்தலங்களுக்கு தொடர்ச்சியாக பயணங்கள் மேற்கொள்ளும் சாரா, அது குறித்த புகைப்படங்கள் வீடியோக்களை இணையதளத்தில் பகிர்வது வழக்கம். இதற்காக அவர் சிலரால் விமர்சிக்கப்பட்டும் இருக்கிறார். கடந்த சில மாதங்களுக்கு முன் இந்து கோயில்களுக்கு தொடர்ந்து பயணிக்கத் தொடங்கிய சாரா அலிகான் மீது இணையதளத்தில் விமர்சனங்கள் வைக்கப்பட்டன.
இதற்கு பதிலளித்த சாரா “என்னுடைய தொழில் நடிப்பது. நான் நடிப்பது உங்களுக்காக, மக்களுக்காக. என்னுடைய வேலை உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் அதற்காக நான் வருத்தமடைவது நியாயமானது. ஆனால் எனக்கு தனிப்பட நம்பிக்கைகள் இருக்கின்றன. ஒரே சமயத்தில் நான் பங்கலா சாஹிப் அல்லது மஹா கால் போகும் அதே பக்தியோடு தான் அஜ்மர் ஷரிஃபுக்கும் செல்கிறேன்.
இனியும் தொடர்ந்து செல்வேன். அதற்காக என்னை யார் என்ன சொன்னாலும் அதைபற்றி நான் கவலைப்படப் போவதில்லை. ஒவ்வொரு இடத்துக்கும் ஒரு ஆற்றல் இருக்கிறது. நான் இப்போது இந்த இடத்தின் ஆற்றலை விரும்புகிறேன். ஒரு படப்பிடிப்புத் தளத்தில் இருக்கும் வேறு வகையான ஒரு ஆற்றலை உணர்கிறேன். அதேபோல் கோயிலுக்கு செல்லும் போதும்” என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் சாரா அலி கானின் புகைப்படங்கள் இணையத்தில் லைக்ஸ் அள்ளி வருகின்றன.