அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் கலை அறிவியல் கல்லூரிகள் உட்பட அனைத்து பல்கலைக்கழகங்களிலும் பொது பாடத்திட்டம்  இந்த கல்வியாண்டிலேயே அமல்படுத்தப்படும் என்று அமைச்சர் பொன்முடி  அறிவித்துள்ளார். புதிய பாடங்களுக்கான பாடத்திட்டம் அடுத்த கல்வியாண்டில் அமல்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 


சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தலைமையில் உயர் கல்வித் துறையின் கீழ் உள்ள 13 பல்கலைக்கழக துணைவேந்தர்கள், பதிவாளர்கள் மற்றும் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர்கள் உடனான  கூட்டம் நடைபெற்றது. துணைவேந்தர்கள் கூட்டம் நிறைவு பெற்றபின் செய்தியாளர்களை சந்தித்த உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேசியதாவது:


’’நிதிநிலை கடுமையாக இருக்கக்கூடிய சூழ்நிலையிலும் கவுரவ விரிவுரையாளர்களின் ஊதியம் 5 ஆயிரம் ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.  தற்போது ரூ.20 ஆயிரம் வழங்கப்படுகிறது. இது இனிமேல் ரூ.25 ஆயிரம் வழங்கப்படும். அவர்களின் பிற கோரிக்கைகளும் படிப்படியாக உயர்த்தப்படும். புதுமைப் பெண் திட்டம், 7.5 சதவீத இட ஒதுக்கீடு, நான் முதல்வன் திட்டம் ஆகியவற்றின் மூலம் மாணவர்கள் உயர் கல்வியில் சேரும் எண்ணிக்கை உயர்த்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டங்களை விரிவுபடுத்தவும் ஆலோசனை செய்யப்பட்டது. 


மாநிலக் கல்விக்கொள்கை அமைக்க உருவாக்கப்பட்ட நீதிபதி குழு, ஆய்வில் ஈடுபட்டு வருகிறது. துணை வேந்தர்களும் இதற்கான ஆலோசனையை வழங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
 
பொதுப் பாடத்திட்டம்


கல்லூரிகளில் ஒரே மாதிரியான பொதுப் பாடத்திட்டம் குறித்து ஏற்கனவே ஆலோசிக்கப்பட்டு முடிவு செய்யப்பட்டது. இது முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அடுத்தடுத்த ஆண்டுகளில் 2, 3ஆம் ஆண்டுகளுக்கும் அறிமுகம் செய்யப்படும்.


இந்த ஆண்டில் அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும், அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் கலை அறிவியல் கல்லூரிகள் அனைத்திலும் தமிழ், ஆங்கிலம் பாடங்கள் 100 ஒரே மாதிரியான பாடத்திட்டமும் மற்ற பாடங்களில் 75 ஒரே மாதிரியான‌ பாடத்திட்டம் உருவாக்கப்படும் என்று முடிவெடுக்கப்பட்டது. மீதமுள்ள 25 சதவீத பாடத்திட்டங்களை வேண்டுமெனில் பல்கலைக்கழகங்களே மாற்றிக்கொள்ளலாம் என்று முன்பே முடிவெடுக்கப்பட்டு, அனுப்பப்பட்டது. துணை வேந்தர்களும் இதற்கு ஒப்புதல் தெரிவித்தனர். 


அடுத்த கல்வியாண்டில்...


பிஎஸ்சி செயற்கை நுண்ணறிவு, இண்டெர்நெட் ஆஃப் திங்க்ஸ் ஆகிய பாடங்களுக்கான பாடத்திட்டம் அடுத்த கல்வியாண்டில் அமல்படுத்தப்படும். இருக்கின்ற பாடத்திட்டங்கள் 90 சதவீத அளவுக்கு பொதுவாக மாற்றப்பட்டு, அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. 


எனினும் இதனால் பல்கலைக்கழகத்தின் அதிகாரம் பறிக்கப்படாது.உயர் கல்வி மன்றத்துக்கு அவர்களை அழைத்துதான் பாடத்திட்டங்கள் மாற்றப்பட்டுள்ளன. இதன் மூலம் ஒரு கல்லூரியில் படித்த மாணவர், வேறு கல்லூரிக்குச் செல்லும்போது அவருக்கு உதவிகரமாக இருக்கும். ஒரு பல்கலைக்கழகத்தில் கீழ் பணியாற்றும் பேராசிரியர் வேறு பல்கலைக்கழகத்துக்கு மாறும் போதும் பாதிக்கப்படாமல் இருக்கும். இதை பெரும்பாலானோர் ஏற்றுக்கொண்டு விட்டார்கள். 




கல்வியின் தரத்தை உயர்த்தும் முயற்சி


முதல்வர் ஆலோசனையின்பேரில், கல்வியின் தரத்தை உயர்த்தும் முயற்சியாக இது மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளின் தரத்தை தேசிய அளவில் உலக அளவில் உயர்த்தப்படும். அதற்காக ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.


பல்கலைக்கழகங்களில் காலியாக உள்ள பதிவாளர், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் பொறுப்புகள் நிரப்பப்படும். இதற்காக குழு அமைத்து தேர்வு செய்யப்படுவார்கள். தமிழ்நாட்டில் காலியாக உள்ள 4000 உதவி பேராசிரியர் பணியிடங்கள் விரைவில் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும். நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. அது முடிந்த பிறகு நிரப்பப்படும்.


இனி ஆண்டுதோறும் ஸ்லெட் தேர்வு 


கடந்தசில ஆண்டுகளாக ஸ்லெட் தேர்வு நடத்தப்படாமல் உள்ளது.  இந்த ஆண்டு ஸ்லெட் தேர்வு நடத்தப்படும். இனிமேல் ஆண்டுதோறும் ஸ்லெட் தேர்வு முறையாக நடத்தப்படும். கல்லூரிகளில் வெவ்வேறு மாதங்களில் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இதில் மாற்றம் செய்யப்படும். இனிமேல் அனைத்து கல்லூரிகளில் ஒரே காலகட்டத்தில் தேர்வுகள் நடத்தப்படும்‌‌.’’


இவ்வாறு அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.


பல்வேறு கல்லூரி பேராசிரியர் சங்கங்களும் கல்வியாளர்களும் பொது பாடத்திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.