மணிப்பூரில் பெண்களுக்கு நேர்ந்த கொடூரத்திற்கு மத்தியில், ஒரு சிறுமியின் ஒற்றை புகைப்படம் 19 ஆண்டுகள் நீடித்த பெரும் போரையே முடிவுக்கு கொண்டு வந்தது உங்களுக்கு தெரியுமா?


அடங்காத மணிப்பூர் தீ..!


மணிப்பூரில் பழங்குடியினர் பட்டியலில் தங்களை இணைக்க வேண்டும் என மெய்தி சமூக மக்களும், அவ்வாறு செய்யக்கூடாது என குக்கி இன மக்களும் நடத்திய போராட்டம் கடந்த மே மாதம் வன்முறையாக மாறியது. இரண்டு மாதங்களுக்கும் மேலாக அங்கு நீடிக்கும் இந்த வன்முறை சம்பவங்களை கட்டுப்படுத்தும் விதமாக, உள்துறை அமைச்சர் அமித் ஷா நேரில் சென்ற பிறகும் கூட எந்த பலனும் இல்லை. இந்நிலையில் தான் பழங்குடியின பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு, கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தது போன்ற கோர சம்பவங்கள் தொடர்பான ஆதரங்கள் ஒவ்வொன்றாக தற்போது வெளிவர தொடங்கியுள்ளன. இதனால், மணிப்பூரில் பதற்றம் உச்சநிலையை அடைந்துள்ளது. அடுத்த நொடி என்ன வேண்டுமானாலும் நிகழலாம் என்ற பதற்றத்தீ அங்கு பற்றி எரிந்துகொண்டுள்ளது.


கொதித்தெழும் மக்கள்:


மணிப்பூரில் வன்முறை மற்றும் கலவரங்கள் கடந்த 70 நாட்களுக்கு மேலாக நீடித்து வந்தாலும், அங்கு அமைதி நிலவுவதற்கு தேவையான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் விரைந்து எடுக்க வேண்டும் என பொதுமக்கள் அமைதியான முறையிலேயே வலியுறுத்தி வந்தனர். ஆனால், பெண்கள் நிர்வானப்படுத்தப்பட்டு அவர்கள் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் தொடர்பான தகவல் வெளியான பிறகு தான், நாட்டின் பல்வேறு முனைகளில் இருந்தும் கடும் கண்டனங்கள் குவிய தொடங்கின.  79 நாட்கள் அமைதி காத்து வந்த பிரதமர் மோடியே, அந்த வீடியோ வெளியான பிறகு தான் மணிப்பூர் கலவரம் தொடர்பாக வாயே திறந்தார். காரணம் எந்த ஒரு சூழலிலும், உலகின் எந்த ஒரு பகுதியிலும் எந்த காரணத்திற்காகவும் பெண்கள் இழிவுபடுத்தப்படக்கூடாது என்பது தான் தார்மீகம். 19 ஆண்டுகள் நீடித்து வந்த வியட்நாம் போர், ஒரு சிறுமியின் புகைப்படத்தால் நின்றது தான் இதற்கு உதாரணம்.


வியட்நாம் போர்:


அமெரிக்க ஆதரவுடன் வடக்கு வியட்நாமை எதிர்த்து, தெற்கு வியட்நாம் 1955ம் ஆண்டு போரிட தொடங்கியது. அமெரிக்க கூட்டுப்படைகள் மற்றும் வியாட்நாம் கூட்டுப்படைகளுக்கு இடையேயான இந்த போர் 1975ம் ஆண்டு வரை நீடித்து வந்தது.


உலகையே உலுக்கிய புகைப்படம்:


1972ம் ஆண்டு டிராங் பேங் பகுதியில் வீசப்பட்ட குண்டால் படுகாயமடைந்த 9 வயது சிறுமி,  உடல் முழுவதும் தீக்காயங்களுடன், தனது இரண்டு கைகளையும் நீட்டிக்கொண்டு முகம் முழுக்க பயத்துடன் உடலில் துணியே இன்றி நிர்வானமாக ஓடிவந்தார்.  நிக் வுட் எனும் பத்திரிகையாளரால் எடுக்கப்பட்ட இந்த புகைப்படம் வெளியாவதற்கே பெரும் போராட்டம் நடத்தப்பட வேண்டி இருந்தது. சிறுமி நிர்வாணமாக இருப்பதைக் காரணமாக காட்டி, புகப்படத்தை வெளியிட ஊடகங்கள் மறுப்பு தெரிவித்துள்ளன. நீண்ட போராட்டத்திற்குப் பிறகு நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் தனது முதல் பக்கத்திலேயே அந்த சிறுமியின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. அதை கண்ட பிறகு தான் போரின் கோர முகத்தை உணர்ந்த உலக நாடுகள், அதனை உடனடியாக முடிவுக்கு கொண்டு வர களத்தில் குதித்தன. 


முடிவுக்கு வந்த போர்:


உலக நாடுகளின் கண்டனத்தினாலும், உள்நாட்டு மக்களின் எதிர்ப்பினாலும் 1973-ம் ஆண்டு மார்ச் 23-ம் தேதி அமெரிக்க ராணுவம் வியட்நாமை விட்டு வெளியேறியது. 1975-ம் ஆண்டு ஏப்ரல் 30-ல், வடக்கு வியட்நாமிடம் தெற்கு வியட்நாம் சரணடைந்தது. அந்த சிறுமிக்கு நேர்ந்தது போன்ற அவலம் போர் போன்ற எந்தவொரு காரணத்தாலும் பெண்ணினத்தில் யாருக்கும் எப்போதும் வந்து விடக்கூடாது என்பது தான் உலக நாடுகள் அனைத்தும் ஒன்றிணைந்ததன் தாத்பரியம். ஆனால், அதையும் மிஞ்சும் விதமாக ஜாதி எனும் போதையால் தன்னிலை  மறந்த மனித மிருகங்கள் தான், மணிப்பூர் பெண்களுக்கு எத்தகைய சூழலிலும் மறக்கவே முடியாத ஒரு அநியாயத்தை இழைத்துள்ளனர்.