சீரியல் நடிகை சம்யுக்தா தன்னைப் பற்றி கடுமையாக விமர்சனம் செய்பவர்களுக்கு புதிதாக வீடியோ ஒன்று வெளியிட்டு பதிலடி கொடுத்துள்ளார்.
கடந்த ஒரு மாத காலமாகவே சீரியல் நடிகை சம்யுக்தா - நடிகர் விஷ்ணுகாந்த் இடையேயான பிரச்சினை சின்னத்திரையினர் இடையே மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. பொதுவாக திரையுலகில் சேர்ந்து நடிக்கும் பிரபலங்கள் காதலிப்பதும், திருமணம் செய்வதும், பிரிவதும் எப்போதும் நடக்கிற ஒன்று தான். இதில் பெரும்பாலும் பிரிந்தபின் ஒருவர் மீது ஒருவர் பெரிய அளவில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுவதும் வழக்கம் தான்.
அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘சிப்பிக்குள் முத்து’ சீரியலில் நடித்த விஷ்ணு காந்த் மற்றும் சம்யுக்தா இருவரும் காதலித்து 8 மாத காதலுக்குப் பின் கடந்த மார்ச் மாதம் திருமணம் செய்துக் கொண்டனர். திருமணம் முடிந்த ஒரு மாதம் கூட முடிவடையாத நிலையில் இருவரும் பிரிந்து விட்டதாக முதலில் தகவல் வெளியானது. இதனை ஒருநாள் சம்யுக்தா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரி மூலம் உறுதிப்படுத்தினார்.
தொடர்ந்து இருவரும் ஒருவர் மேல் ஒருவர் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைக்க தொடங்கினர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற சம்யுக்தா, “விஷ்ணுகாந்த் என்னையும், என்னோட பெற்றோரையும் மரியாதையாக நடத்தியது இல்லை என்றும், அவர் என்னை செக்ஸுக்காக மட்டுமே திருமணம் செய்தார் என நினைக்கிறேன்” என பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்தார்.
மேலும் அதில், “அவர் 24 மணி நேரமும் பாலியல் எண்ணத்திலேயேதான் இருப்பார். நான் பாலியல் உறவில் ஒத்துழைக்கவில்லை என்றால் என்னை வேறு மாதிரி ட்ரீட் பண்ணுவார்” என திடுக்கிடும் புகார்களை அடுக்கினார்.இப்படியான நிலையில் இருவரும் ஒருவரையொருவர் அவமானப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாகவும் ரசிகர்களும் சமூக வலைத்தளத்தில் விமர்சித்து வருகின்றனர்.
இதற்கிடையில் சம்யுக்தா புதிதாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நடிகர் விஜய் ஆடியோ வெளியீட்டு விழா ஒன்றில் பேசிய வசனத்தை ரீல்ஸ் செய்துள்ளார். அந்த வீடியோவில் விஜய், “நம்ம கையில என்ன ஆயுதத்தை எடுக்கணும்ன்னு எதிரி தான் முடிவு பண்றான் சொல்வாங்க. நம்மளை வெட்ட வரும் எதிரிகிட்ட வெள்ளைக் கொடி காட்டிகிட்டு நிற்க முடியாதுல.. அவனுடைய போக்குலேயே விட்டுறணும். சாஃப்டா பேசுனா சாஃப்டா பேசணும். வேற மாதிரி பேசுணா நம்மளும் வேற மாதிரி தான் பேசணும்” என்ற வசனத்தை பேசியிருப்பார். இதன்மூலம் சம்யுக்தா தன்னை விமர்சித்தவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.