சாதிப் பெயரை நீக்குவதால் மட்டும்  நீங்கள் நல்லவராகிவிட மாட்டீர்கள் என மலையாள நடிகை சம்யுக்தாவை, சக நடிகர் ஷைன் டாம் சாக்கோ கடுமையாக விமர்சித்துள்ளார். 


கடந்த 2016 ஆம் ஆண்டு மலையாளத்தில் பாப்கார்ன் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை சம்யுக்தா. பல படங்களில் நடித்து இளைஞர்களின் மனம் கவர்ந்த இவர், நடப்பாண்டு தமிழில் அறிமுகமானார். கடந்த பிப்ரவரி மாதம் தனுஷ் நடிப்பில் வெளியான “வாத்தி” படத்தின் மூலம் அறிமுகமானார். இப்படியான நிலையில், கடந்த மே 5 ஆம் தேதி தெலுங்கில் சம்யுக்தா நடித்த “விருபக்‌ஷா” படத்தின் தமிழ் டப்பிங் வெளியானது. 


கடுமையாக விமர்சித்த  ஷைன் டாம் சாக்கோ


இதற்கிடையில் மனு சுதாகரன் இயக்கத்தில் மலையாளத்தில் வெளியாகவுள்ள “பூமராங்” படத்தின் ஷைன் டாம் சாக்கோ, சம்யுக்தா இருவரும் நடித்துள்ளனர். இந்த படத்தின் ப்ரோமோஷன்களில் சம்யுக்தா பங்கேற்கவில்லை என தயாரிப்பாளர் குற்றம் சாட்டினார். இதுதொடர்பாக கருத்து தெரிவித்த அப்படத்தின் ஹீரோ ஷைன் டாம் சாக்கோ, ”​​​​ஒருவரால் மற்ற மனிதர்களைப் புரிந்துகொண்டு முடிக்க முடியாவிட்டால் அதனை என்னவென்று சொல்ல என தெரியவில்லை.  


நீங்கள் நடித்த படத்தின் ப்ரோமோஷனைத் தவிர்த்துவிட்டு  பெயரை மாற்றுவதால்,நீங்கள் (சம்யுக்தா) நல்லவராகிவிட மாட்டீர்கள். ஒரு வேலையை எடுத்தால், அதை முடிக்க வேண்டிய தார்மீக பொறுப்பு இருக்கிறது. நீங்கள் நாயர், மேனன், கிறிஸ்தவர் அல்லது முஸ்லீம் என யாராக வேண்டுமானாலும் இருங்கள். ஆனால் முதலில் சக மனிதர்களைப் புரிந்துகொண்டு நடந்தால் தான் மற்றதெல்லாம் வரும்” என கடுமையாக விமர்சித்திருந்தார். 


பதிலடி கொடுத்த சம்யுக்தா


இதுதொடர்பாக கருத்து தெரிவித்த சம்யுக்தா, “ஷைன் டாம் சாக்கோ சொன்ன கருத்து என்னை காயப்படுத்தியது.  எனது சாதிப் பெயரை நீக்குவது தொடர்பான முடிவை மிகவும் முற்போக்கான முறையில் எடுத்தேன். இதை செய்த உடனேயே மக்கள் என்னை சாதிப் பெயர் சொல்லி அழைப்பதை நிறுத்தமாட்டார்கள் என்று எனக்குத் தெரியும். அதற்கு நேரம் எடுக்கும். குறிப்பாக சென்னை போன்ற பிற நகரங்களுக்கு திரைப்பட விளம்பரத்திற்காக சென்றிருந்தபோது வெறுப்படைந்ததால் இந்த முடிவை எடுத்தேன். கேரளா மிகவும் முற்போக்கு சிந்தனை கொண்ட மக்கள் நிறைந்த நாடு. பல ஆண்டுகளாக இதேபோன்ற நடவடிக்கையை ஏராளமானோர் எடுத்துள்ளனர்” என தெரிவித்திருந்தார். 


முன்னதாக வாத்தி படத்தின் ப்ரோமோஷனுக்காக சென்னை வந்த சம்யுக்தாவை, நிருபர் ஒருவர் சம்யுக்தா மேனன் என அழைத்தார். உடனே மேனன் என்ற பெயரை குறிப்பிட வேண்டாம் என அவர் தெரிவித்திருந்தார். இதற்கிடையில், ஊடகம் ஒன்றில் சம்யுக்தா அளித்த பேட்டியில், “நான் தயாரிப்பு நிறுவனங்களிடம் மற்றும் அனைவரிடமும் என் சாதிப் பெயரை பயன்படுத்த வேண்டாம் என கேட்டுக் கொண்டு விட்டேன்.


ஆனாலும் என்னை சம்யுக்தா மேனன் என்று அழைக்கிறார்கள். வாத்தி பட ப்ரோமோஷனின் போது நடந்த சம்பவம் செய்தியாகவும் விவாதமாகவும் மாறியது. முழு ஜாதி அமைப்பும் ஒழிய வேண்டும் என்பதற்காக இந்த விவாதம் நடப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன், மேலும் அந்த விவாதத்தைக் கொண்டு வருவதில் நானும் ஒரு பங்கு வகிக்கிறேன் என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என அவர் கூறியுள்ளார்.