காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவூ 370 ஒரு வரலாறு விரைவில் மக்கள் அதை உணர்வார்கள் என்று அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.


ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு:


ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாடு கோவாவில் நடைபெற்றது. நேற்றும் இன்றும் நடந்த இந்த மாநாட்டில் இந்தக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளாக உள்ள நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ தனது நாட்டுக் குழுவினருடன் வந்திருந்தார்.


காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது தொடர்பாக பாகிஸ்தானின் கருத்துக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் ஜெய்சங்கர், காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டது ஒரு வரலாறு. காஷ்மீர் இப்போதும் எப்போதும் இந்தியாவின் ஒரு பகுதியாகவே இருக்கும். நீங்கள் தூக்கத்திலிருந்து எழுந்து காபியை சுவையுங்கள் என்று கூறினார்.






முன்னதாக ஜர்தாரி பூட்டோ, சட்டப்பிரிவு 370ஐ காஷ்மீரில் நீக்கியதன் மூலம் சர்வதேச சட்டத்தை இந்திய மீறியதாகப் பேசினார். இதனால் தான் ஜெய்சங்கர் பதிலடி கொடுக்கும் வகையில் பேசினார்.
காஷ்மீர் பற்றி பேசுவதற்கு ஒரே ஒரு விவகாரம் தான் இருக்கிறது. அது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்பது பற்றியது மட்டும் தான் என்றும் அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார்.


பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பேசுகையில் சர்வதேச சட்டத்திட்டங்களை மதிக்க வேண்டிய கடமை உலக நாடுகளுக்கு இருக்கிறது என்று கூறியிருந்தார்.


பாகிஸ்தானுக்கு குட்டு...


முன்னதாக இன்று காலை பேசிய ஜெய்சங்கர் "இந்த உலகம் கொரோனா கொடுத்த சவால்களை எதிர்கொண்டிருந்தாலும் கூட தீவிரவாதம் ஒருபுறம் தழைத்தோங்குகிறது. அதில் இருந்து நமது பார்வையை அகற்றுவது நமது பாதுகாப்பு நலன்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியதாக அமையும். பயங்கரவாதத்தை நியாயப்படுத்த எந்த ஒரு காரணமும் இருக்க முடியாது. எனவே எல்லை தாண்டிய பங்கரவாதம் உள்ளிட்ட அனைத்து வகையிலான பயங்கரவாத நடவடிக்கைகளையும் நாம் கட்டுப்படுத்த வேண்டும்.


மக்கள் நலன்:


உலக மக்கள் தொகையில் 40 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் எஸ்சிஓ நாடுகளில் இருப்பதால் நமது ஒன்றிணைந்த முடிவு நிச்சயம் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியும். இப்போதைய சூழலில் ஆப்கன் மக்களின் நலனை நோக்கி நாம் கவனம் செலுத்த வேண்டும். பயங்கரவாதம் மற்றும் போதை மருந்து கடத்தலைத் தடுத்தல், பெண்கள், குழந்தைகள், சிறுபான்மையினர்களின் உரிமைகளை பாதுகாத்தல் போன்றவைகளில் இருக்க வேண்டும்.


உலகளாவிய சவால்களை எதிர்கொள்வதற்கான பலதரப்பட்ட அனுகுமுறைக்கு இந்தியா எப்போதும் துணை நிற்கும். அது தொடர்பான இந்தியாவின் அனுபவங்களை பகிர்ந்து கொள்வதற்கு நண்பனாக நாங்கள் எப்போதும் தயாராகவே உள்ளோம்".  என்று பேசியிருந்தார்.