சமீரா ரெட்டி
கெளதம் மேனன் இயக்கிய வாரணம் ஆயிரம் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களைக் கவர்ந்தவர் நடிகை சமீரா ரெட்டி (Sameera Reddy). தொடர்ந்து வெடி, வேட்டை, அசல் ஆகிய படங்களில் நடித்துள்ளார். தமிழில் பெரிய அளவில் படங்கள் கைகொடுக்கவில்லை என்றாலும் இந்தி, தெலுங்கு, பெங்காலி மொழிப் படங்களில் முன்னணி நடிகையாக இருந்துள்ளார் சமீரா ரெட்டி. கடந்த 2014ஆம் ஆண்டு அக்ஷய் வர்தே என்கிற தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டார் சமீரா ரெட்டி. திருமணத்திற்கு பிறகு திரைப்படங்களில் நடிப்பதை முழுவதுமாக கைவிட்டு தனது குடும்பத்துடன் பெரும்பான்மையான நேரத்தை செலவிட்டு வருகிறார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவர் வெளியிடுல் ரீல்ஸ் அடிக்கடி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றன. இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் அதிர்ச்சிகரமான தகவல் ஒன்றைப் பகிர்ந்துகொண்டுள்ளார் சமீரா ரெட்டி.
மார்பக மாற்று சிகிச்சைக்கு வற்புறுத்தினார்கள்
சமீபத்தில் தனது இளமைக்கால புகைப்படம் ஒன்றையும் தனது 40 வயது புகைப்படம் ஒன்றையும் நடிகை சமீரா ரெட்டி தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார். தான் இளமையாக இருந்தபோது ரொம்பவும் ஒல்லியாக இருந்தது தனக்கு பிடித்தது என்றும், தற்போது 40 வயதில் தனது உடலமைப்பை தான் மிகவும் ரசிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் பல்வேறு தவறான செய்திகள் வெளியானதன் காரணமாக கூகுளில் தனது வயது 38 என்று பதிவாகியதாகவும், பின் தான் அதை 40 என்று சரிசெய்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தான் சினிமாவில் நடிக்கத் தொடங்கியபோது தன்னைச் சுற்றி இருந்த பலர் தன்னை மார்பக மாற்று சிகிச்சை மேற்கொள்ள வற்புறுத்தியதாக சமீரா ரெட்டி தெரிவித்துள்ளார். “சினிமாத் துறையில் இருந்த பலர் அதை செய்துகொள்வதாக சொல்லி நீங்களும் ஏன் செய்துகொள்ளக்கூடாது என என்னிடம் சொன்னார்கள். நீங்கள் ஏதோ ஒரு குறையுடன் இருப்பதை போல் உங்களை உணரவைப்பார்கள். ஒரு சில நல்ல கம்பெனிகள் அந்த மாதிரியான தவறான முடிவுகளை நான் எடுக்காததற்கு காரணமாக அமைந்தன.
ஒருவர் மார்பக சிகிச்சை செய்துகொள்கிறார் என்றால் நான் அவரைத் தவறாக நினைக்க மாட்டேன், ஆனால் எனக்குள் என்னை சரிசெய்து கொள்வது தான் எனக்கான வழி. ஆரம்பகாலத்தில் நான் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்களை பதிவிடும்போது ஃபில்டர் பயன்படுத்தச் சொல்லி எனக்கு நிறைய கமெண்ட்ஸ் வந்தன. ஆனால் இது தான் என்னுடைய உடலின் நிறம், இதுதான் என்னுடைய எடை, இதைதான் தான் உங்கள் முன் காட்டப்போகிறேன்.
சமூகத்தில் சரியான உடலமைப்பு என்று வரையறுக்கப்பட்டிருப்பதை பின்பற்றுவதை விட, நான் நானாக இருப்பதில் மகிழ்ச்சியாக இருக்கிறேன். ஒரு நடிகையாக இருக்கும்போது உங்களுக்கும் பார்வையாளருக்கு இடையில் ஒரு திரை இருக்கிறது. அதனால் தான் நான் அதிகாலை தூங்கி எழுந்தவுடன் வீடியோ பதிவிட்டால் அவர்களுக்கு அசிங்கமாகத் தெரிகிறேன். ஆனால் இன்ஸ்டாகிராமில் என்னால் என் உண்மையான தோற்றத்தை வெளிப்படுத்த முடிகிறது" என்று சமீரா ரெட்டி கூறியுள்ளார்.