திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மேம்படுத்துவது குறித்து இந்து சமய மற்றும் அறநிலையத்துறை ஆணையர் க.வீ.முரளிதரன் தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன் முன்னிலையில் இன்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோவிலுக்கு ஒவ்வோரு மாதம் பௌர்ணமி நாட்கள் மற்றும் வருடத்திற்கு ஒரு முறை வரும் சித்ரா பௌர்ணமி மற்றும் கார்த்திகை தீபம் நாட்களில் வெளிநாடுகளில் இருந்தும் வெளி மாநிலங்கள் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் அண்ணாமலையார் கோவிலில் சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு, சிவனே காட்சிதரும் அண்ணாமலையார் மலையை சுற்றி கிரிவலம் வருகின்றனர். அதனை முன்னிட்டு பக்தர்கள் வசதிக்காக அரசு சார்பில் பல்வேறு திட்டப்பணிகள் செயல்படுத்தப்பட்டுள்ளது.
கிரிவல பாதையில் கூடுதல் கழிவறை
மேலும் திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் மற்றும் கிரிவலப்பாதையில் பக்தர்களின் அடிப்படை வசதிகள் மேம்படுத்தும் பொருட்டு முதலமைச்சரின் செயலாளர் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் தலைமையில் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற சீராய்வு கூட்டத்தில் வழிக்காட்டப்பட்டு மேற்கொள்ளபட்ட நடவடிக்கையின் அடிப்படையில் 14 கிலோ மீட்டர் கொண்ட கிரிவலப்பாதையில் ஒவ்வோரு 200 மீட்டர் இடைவேளியில் திருக்கோவில் மற்றும் பிற துறைகளுக்கு சொந்தமான 20 இடங்களில் கூடுதலாக கழிவறைகள் அமைப்பதற்கும் ஏற்கனவே உள்ள கழிவறைகளை புதுப்பிப்பதற்கும் தேர்வு செய்யப்பட்டுள்ள இடங்கள் பார்வையிடப்பட்டது.
மேலும் செங்கம் சாலையில் பக்தர்கள் தங்குவதற்கு ஏதுவாக கூடுதலாக பக்தர்கள் தங்கும் விடுதி (யாத்ரி நிவாஸ்) உணவு விடுதி மற்றும் அன்னதானம் வழங்குவதற்கான இடங்களை அமைப்பதற்கு ஏதுவாக சாத்தியக்கூறுகளை ஆராய்ந்திடவும் இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்கள்.
அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் காத்திருப்பு கூடம் அமைத்தல்
முன்னதாக திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேசுவர் திருக்கோயிலில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மேம்படுத்துவது குறித்தும் வரிசையில் செல்வதற்கு (Queue) வசதிகளை மேம்படுத்திடவும் பிரசாதக் கடைகள் மற்றும் பக்தர்கள் காத்திருப்பு கூடம் அமைத்தல் போன்ற பணிகளை மேற்கொள்வதற்கு இந்து சமய அறநிலைத்துறை ஆணையர் ஆய்வு செய்தார். இந்நிகழ்வின் போது கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) செ.ரிஷப், இந்து சமய அறநிலையத்துறை இணை இயக்குநர் (திருப்பணிகள்) கே.ஜெயராமன், இந்து சமய அறநிலையத்துறை இணை இயக்குநர் சுதர்சனன், திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் இணை ஆணையர் மற்றும் செயல் அலுவலர் சி.ஜோதி மற்றும் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.