நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாலிவுட் நடிகை ஆலியா பட் நடித்திருக்கும் `கங்குபாய் கதியாவாடி’ படத்தின் ட்ரைலரைப் பகிர்ந்து அதனைப் பாராட்டியுள்ளார். நடிகை ஆலியா பட்டின் நடிப்பைப் பாராட்டியுள்ள நடிகை சமந்தா அவர் மிகச் சிறப்பாக நடித்துள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும், `கங்குபாய் கதியாவாடி’ திரைப்படத்தின் ட்ரைலரையும் பாராடியுள்ளார். 


பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட `கங்குபாய் கதியாவாடி’ திரைப்படத்தின் ட்ரைலரைத் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரீஸ் பகுதியில் பகிர்ந்துள்ள நடிகை சம்ந்தா, அதில் நடிகை ஆலியா பட்டை டேக் செய்துள்ளதோடு, அவரை `அற்புதம்’ எனக் குறிப்பிட்டு பாராட்டியுள்ளார். 



`கங்குபாய் கதியாவடி’ படம் குறித்து பலரும் இணையத்தில் பேசி வரும் சூழலில், பாலிவுட் பிரபலங்களான ஜான்வி கபூர், அனுஷ்கா ஷெட்டி, ரன்பீர் கபூர், அவரது தாய் மௌனி ராய் முதலான பலரும் தங்கள் சமூக வலைத்தளங்களில் ஆலியா பட்டின் நடிப்பைப் பாராட்டி பதிவிட்டு வருகின்றனர். 


`கங்குபாய் கதியாவடி’ திரைப்படம் பத்திரிகையாளர் ஹுசைன் சைதி எழுதியுள்ள `மாஃபியா க்வீன்ஸ் ஆஃப் மும்பை’ என்ற புத்தகத்தில் வரும் கங்குபாய் கொதேவாலி என்ற பெண்ணின் கதையைத் தழுவி உருவாக்கப்பட்டுள்ளது. இந்தத் திரைப்படத்தில் அஜய் தேவ்கன், சீமா பாவா, விஜய் ராஸ் முதலான பிரபல நடிகர்கள் முன்னணி வேடங்களில் நடித்துள்ளனர். வரும் பிப்ரவரி 25 அன்று, `கங்குபாய் கதியாவடி’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 



கங்குபாய் கதியாவடி


நடிகை சமந்தா தற்போது இயக்குநர்கள் ஹரி, ஹரி கிருஷ்ணா ஆகியோருடன் `யஷோதா’ திரைப்படத்தின் படப்பிடிப்புகளில் மும்முரமாக பணியாற்றி வருகிறார். மேலும், அவர் தன்னுடைய ஹாலிவுட் பயணத்தின் முதல் திரைப்படமாக `அரேஞ்ச்மெண்ட்ஸ் ஆஃப் லவ்’ திரைப்படத்தில் நடித்து வருவதோடு,  விரைவில் தன்னுடைய பாலிவுட் பயணத்தையும் அறிவிக்கவுள்ளார். தெலுங்கு மொழியில் நடிகர்கள் அல்லு அர்ஹா, தேவ் மோகன் ஆகியோருடன் `சகுந்தலம்’ திரைப்படத்திலும், தமிழில் நயன்தாரா, விஜய் சேதுபதி ஆகியோருடன் `காத்துவாக்குல ரெண்டு காதல்’ திரைப்படத்திலும் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.