தஞ்சை அருகே உள்ள மருங்குளத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ளது. இப்பள்ளியில் சுமார் 700 க்கும் மேற்ப்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். காலை வழக்கம் போல் பள்ளி மாணவ, மாணவிகள் பள்ளிக்கு வந்து வகுப்பறையில் பாடங்களை கவனித்து கொண்டிருந்தனர். பள்ளியின் வளாகத்தில் சத்துணவு மாணவர்களுக்கு மதிய உணவு சமையல்கூடத்தில் தயாராகி கொண்டிருந்தது. இந்த பணியில் சமையலர், உதவியாளர் ஆகியோர் ஈடுபட்டிருந்தனர்.அப்போது திடீரென சிலிண்டர் டியூப்பில் கசிவு ஏற்பட்டது. ஸ்டவில் இருந்து தீ, சிறிது நேரத்தில் சிலிண்டர் டியூபில் தீ பிடித்து எரிய தொடங்கியது. இதனால் அதிர்ச்சியடைந்த சமையலர் உடனடியாக பள்ளி தலைமை ஆசிரியரிடம் தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து தீ அணைப்பான் கருவி கொண்டு உடனடியாக தீ அணைக்கப்பட்டு மற்ற இடங்களுக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டது. பள்ளிக்குள் தீவிபத்து என்ற தகவல் பரவியதயடுத்து, மாணவர்களின் பெற்றோர்கள், பொது மக்கள் பள்ளிக்கு முன் திரண்டனர். இதில் அதிஷ்டவசமாக எந்த விதமான விபத்தின்றி மாணவர்கள் உயிர் பிழைத்தனர்.இருப்பினும் தகவல் அறிந்து வந்த தஞ்சை தீயணைப்பு துறையினர் சிலிண்டரை அகற்றி வேறு சிலிண்டர் பொருத்தினர். இதனால் பெருமளவில் தீ விபத்து தடுக்கப்பட்டு உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவம் பள்ளியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து பொது மக்கள் கூறுகையில்,இப்பள்ளியில், ஏழை விவசாய குடும்பத்தை சேர்ந்தவர்கள் படித்து வருகின்றனர்.. இங்கு சுமார் 25 க்கும் மேற்பட்ட மாணவர்கள் சத்துணவு சாப்பிட்டு வருகின்றனர். சமையலுக்கு பயன்படுத்தப்படும் சிலிண்டர் கேஸின் டீயூப் போடப்பட்டு பல நாட்கள் ஆனதால், பல இடங்களில் விரிசல் விட்டிருந்தது. ஆபத்தான நிலையில் இருக்கும் சிலிண்டரின் டீயூப் குறித்து பள்ளி நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளார். ஆனாலும் எந்த பிரச்சனையும் வராது என பள்ளி நிர்வாகத்தினர் இருந்து விட்டனர். சமைக்கும் போது, உணவில் சேர்க்கப்படும் எண்ணை டீயூப்பில் ஒட்டியிருந்ததால், கேஸில் கசிவு ஏற்பட்டு, அதில் ஒட்டியிருந்த எண்ணையில் தீப்பிடித்துள்ளது. சிலிண்டர் வெடித்திருந்தால், அருகிலுள்ள பள்ளி வகுப்பறைகளில் படித்து கொண்டிருந்த மாணவர்களின் நிலை கேள்வி குறியாகியிருக்கும்.
சமைக்கும் போது தீப்பிடித்ததால், உடனடியாக தீயணைக்கும் கருவியை கொண்டு அணைத்து விட்டனர். பள்ளி மாணவர்கள் இருந்திருந்தால், பெரும் உயிர் சேதம் ஏற்பட்டிருக்கும்.கடந்த 2004 ஆம் ஆண்டு கும்பகோணம் ஸ்ரீகிருஷ்ணா பள்ளியில், சத்துணவு கூடத்தில் ஏற்பட்ட தீவிபத்தினால், 94 பள்ளி குழந்தைகள் தீயில் கருகி இறந்தனர். 18 குழந்தைகள் தீக்காயங்களுடன் உயிர் பிழைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. சத்துணவு கூடத்தில் பயன்படுத்தப்படும் சிலிண்டர்களின் தரம் குறித்தும், அடுப்பு, டீயூப் தரமானவைகளாக பயன்படுத்த வேண்டும், வாரந்தோறும் மட்டுமில்லாமல், சமைக்க தொடங்கும் போது, டீயூப்,சிலிண்டர்கள் சரியாக இயங்குகிறதா, கேஸ் மணம் வருகிறதா என ஆய்வு செய்திருந்தால், இது போன்ற விபரீதம் நடந்திருக்காது.எனவே, மாவட்ட நிர்வாகம், கேஸ் சிலிண்டர், அடுப்பு, டீயூப்புக்களை தினந்தோறும் பராமரித்து, கண்காணிக்க வேண்டும் என உத்தரவிட வேண்டும் என்றனர்.