காதல் தி கோர்


மம்மூட்டி ஜோதிகா நடித்து கடந்த நவம்பர் 23 ஆம் தேதி வெளியானத் திரைப்படம் காதல் தி கோர். ஜியோ பேபி இந்தப் படத்தை இயக்கியுள்ளார். ஆதர்ஷ் சுகுமாறன் மற்றும் பால்சன் சகாரியா இந்தப் படத்திற்கு திரைக்கதை எழுதியுள்ளார்கள். நடிகர் மம்மூட்டியின் தயாரிப்பு நிறுவனமான மம்மூட்டி கம்பெனி இந்தப் படத்தை தயாரித்துள்ளது. இயக்குநர் ஜியோ பேபி தன்னுடைய முந்தையப் படமான தி கிரேட் இந்தியன் கிச்சன் படத்தைப் போல் இந்தப் படத்திலும் ரசிகர்களைக் கவர்ந்துள்ளார்.


கதை


வங்கி ஊழியராக பணியாற்றி ஓய்வுபெற்ற மேத்யூ (மம்மூட்டி) தன்னுடைய மனைவி ஓமனா (ஜோதிகா) மகள் ஃபெமி மற்றும் தன்னுடைய தந்தையுடன் வசித்து வருகிறார். தன்னுடைய ஊரில் நடக்கும் இடைத்தேர்தலுக்கு மேத்யூ நிற்க வைக்க முடிவு செய்யப்படுகிறது. மக்கள் மத்தியில் நல்ல அபிப்பிராயம் பெற்ற மேத்யூ இந்த தேர்தலில் நிற்கும் அதே நேரத்தில் அவரது மனைவி ஓமனா அவரிடம் விவாகரத்து கேட்டு மனு தாக்கல் செய்வது அனைவர் மத்தியிலும் சர்ச்சையை ஏற்படுத்துகிறது.


தன்னுடைய கணவன் தன் பாலின ஈர்ப்புக் கொண்டவர் என்பதை மறைத்து 20 ஆண்டுகள் தன்னுடன் குடும்பம் நடத்தி தன்னை ஏமாற்றியுள்ளதாக குற்றம் சாட்டுகிறார் ஓமனா. தன் மீதான குற்றச்சாட்டுகள் பொய்யாக வைக்கப்பட்டவை என்று வாதாடுகிறார் மேத்யூ. பல எதிர்ப்புகளையும் கடந்து ஓமனா இந்த விவாகரத்தை பெறுவதில் ஏன் இவ்வளவு முனைப்பு காட்டுகிறார்? என்பதே காதல் தி கோர் படத்தின் கதை.


தன் பாலின ஈர்ப்புக் கொண்டவர்களின் மேல் படிந்திருக்கும் சமூகத்தின் தவறான புரிதல் ஒருபக்கம். ஆனால் இந்தப் படம் சித்தரிப்பது இந்த நெருக்கடிகளால் பயந்து தன்னை மறைத்து வாழ வேண்டிய கட்டாயத்திற்கும் தன்னுடைய அடையாளத்தை நிராகரிக்கும் நிலைக்கு ஒருவர் செல்வதன் உளவியலை எந்த வித ஆர்பாட்டமும் இல்லாமல் எளிமையான ஒரு குடும்ப பின்னணியில் வைத்து பேசுகிறது.


மம்மூட்டியப் புகழ்ந்த சமந்தா


நடிகர் மம்மூட்டி இப்படத்தில் ஒருபாலீர்ப்புக் கொண்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.  மலையாள சினிமாவில் மிகப்பெரிய ஸ்டாரான மம்மூட்டி  இந்த கதாபாத்திரத்தை ஏற்று நடித்ததற்காக திரையுலகினரால் பாராட்டப் பட்டு வருகிறார். எந்த ஒரு  மொழியிலும் ஒரு சூப்பர்ஸ்டார் செய்துவிடாத ஒரு முயற்சியாக இது பார்க்கப் படுகிறது. அந்த வகையில் காதல் தி கோர் படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாராட்டி எழுதியுள்ளார். இந்தப் படத்தின் தாக்கத்தில் இருந்து வெளிவர தனக்கு இன்னும் சில நாட்கள் ஆகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். நடிகர் மம்மூட்டியை தன்னுடைய ஹீரோ என்று குறிப்பிட்டுள்ளார் நடிகை சமந்தா. சமந்தாவின் இந்த பதிவு இணையதளத்தில் வைராகி வருகிறது.