பிரபலங்களின் சொந்த வாழ்க்கை எப்போதுமே கண்ணாடி போன்றது. அதில் சிறு கீறல் விழுந்தாலும், அது காட்டுத்தீயாய் பரவும், நவீன உலகில் பகிரும். பிரபலங்களின் மகிழ்வான நிகழ்வுகள் எப்படி இங்கு பரபரப்பாக பேசப்படுகிறதோ... அதே போல் தான், அவர்களின் சோகங்களும் பொதுவெளியில் உலா வரும். அப்படி தான், சில ஆண்டுகளுக்கு முன் சமந்தா-நாகசைதன்யாவின் திருமணமும் கொண்டாடப்பட்டது. தமிழ்-தெலுங்கு சினிமா ரசிகர்களின் ஏதோபித்த ஆதரவை பெற்ற பிரபலங்களின் திருமணம் அது. ஒரு பிரபலத்தின் திருமணமே இங்கு நான்கு நாளைக்கு பேசப்படும். அதில் இருவரும் பிரபலம் என்றால், அதுவும் முன்னணி பிரபலம் என்றால் சொல்லவா வேண்டும். காணும் இடமெல்லாம் மகிழ்ச்சி.. துள்ளல்... கொண்டாட்டம்... கோலாகலம் என சிலாகிக்கப்பட்ட சைதன்யா-சமந்தா திருமணம்... தொடங்குவதற்குள் இன்று முடிவுக்கு வந்துள்ளது. காரணங்கள் நமக்கு தேவையில்லை. ஆனால்... அந்த திருமண பந்தம் தொடங்கிய இடத்தை நினைவூட்ட விரும்புகிறோம்...


சைதன்யா-சமந்தா முதல் சந்திப்பு!




பிரபல தெலுங்கு நடிகரான மறைந்த நாகேஸ்வரராவ் பேரனும், நடிகர் நாகர்ஜூனாவின் மகனுமான நாக சைதன்யாவும், சமந்தாவும் முதன் முதலில் ‛ஏம் மாய சேஸாவே’ என்கிற தெலுங்கு படத்தில் முதன் முதலில் அறிமுகமாகினர். முதல் படத்திலேயே அவர்களுக்குள் காதல் புகுந்தது. நாகர்ஜூனா-அமலா காதல் தம்பதி என்பதால், சைதன்யா திருமணத்திற்கு நாகர்ஜூனா பச்சைக் கொடி காட்டினார். சமந்தா வீட்டிலும் முழு ஆதரவு. இதைத் தொடர்ந்து இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்து, அதற்கான அறிவிப்பும் கோலாகலமாக அறிவிக்கப்பட்டது. அன்றிலிருந்து தெலுங்கு திரையுலகில் சைதன்யா-சமந்தா காதல் இல்லாத கிசுகிசு செய்தியும் இல்லை, கொண்டாட்டமும் இல்லை.


இந்து-கிறிஸ்தவ முறையில் திருமணம்!




சைதன்யா இந்து, சமந்தா கிறிஸ்தவர். ஆனால் அவர்களின் திருமணத்தை இரு மத சடங்குகளுடன் கொண்டாட இருதரப்பும் முடிவு செய்தது. 2017 அக்டோபர் 6ம் தேதி இந்து முறைப்படியும், அக்டோபர் 7 ம் தேதி கிறிஸ்தவ முறைப்படியும் சைதன்யா-சமந்தா காதல் திருமணம் நடைபெற்றது. நடைபெற்றது என்று கூறினால், அது சாதாரணமாக கடந்து விடும். கொண்டாடப்பட்டது. அத்தனை பிரபலங்களும் அந்த இரண்டு நாட்கள் அங்கு தான் இருந்தனர். விலை உயர்ந்த ஆடை, அழகான அணிகலன், ஆச்சரியமூட்டும் அலங்காரம் என சினிமாவை மிஞ்சும் செட்டிங் காட்சிகள் பின்னணியில் ஊர் கூடி கொண்டாடும் தேரோட்டம் போல நடந்து முடிந்தது சைதன்யா-சமந்தா கல்யாணம். 


ஐதராபாத்தில் நிச்சயதார்த்தம்... கோவாவில் கல்யாணம்!




சினிமாவில் பாடல்களுக்கே வெளிநாடு சூட்டிங் செல்லும் சினிமாக்காரர்களின் ரசனை, வாழ்வில் ஒருமுறை வரும் திருமணத்தை அவ்வளவு எளிதில் கடந்துவிடுவார்களா...? அப்படி தான் நடந்தது சைதன்யா-சமந்தாவின் திருமணமும். ஐதராபாத்தில் நடந்த நிச்சயதார்த்தமே வேறு லெவலுக்கு பேசப்பட்டது. அப்படி இருக்கும் திருமணம் சொல்லவா வேண்டும்... அதை இன்னும் கோலாகலப்படுத்த நினைத்த நாகர்ஜூனா உள்ளிட்ட குடும்பத்தினர், பலரும் ஹனிமூன் செல்லும் கோவாவில், திருமணத்தையே நடத்த முடிவு செய்தனர்.




அதன் படி ஒட்டுமொத்த உறவினர்களுடன் கோவாவில் கோலாகலமாக ஏற்பாடு செய்யப்பட்டது சமந்தா-சைதன்யா திருமணம். கோவா நட்சத்திர ஓட்டலில் நடந்து திருமண விழாவில், முக்கியமான உறவினர்கள் 150 பேருக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டிருந்தாலும், அதன் நடந்த வரவேற்பு விழாவில் ஒட்டுமொத்த பிரபலங்களும் பங்கேற்று நாடு முழுவதும் பேசும் பொருளானது அந்த கல்யாணம். 


ஒவ்வொரு ஆண்டும் நடந்த திருமண நாள் கொண்டாட்டம்!




திருமணத்திற்கு பிறகு சைதன்யா-சமந்தா ஜோடி இன்னும் பிரபலமானது. பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர்களை ஜோடியாக காண முடிந்தது. சிறந்த காதல் ஜோடிகளாக அவர்கள் வலம் வந்தனர். ஆனாலும் அவர்களின் சினிமா தொழிலில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. வழக்கம் போல சமந்தா படங்களில் நடித்துக் கொண்டிருந்தார். இன்னொரு புறம் சைதன்யாவும் நடித்துக் கொண்டிருந்தார். ஒவ்வொரு திருமண நாளையும் அவர்கள் கொண்டாடித்தீர்த்தனர். எங்காவது வெளியூர், வெளிநாடு சென்று விதவிதமான போட்டோக்களை பதிவிட்டு தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.




சமந்தா ரூத் பிரபு என்கிற தனது பெயரை, சமந்தா அக்கினேனி என மாற்றிக்கொண்டார். ‛இப்படி ஒரு ஜோடியா...’ என மூக்கு மேல் விரல் வைக்காத ஆளே இல்லை..’ என்று தான் சொல்ல வேண்டும். யார் கண் பட்டதோ... என்று கிராமத்தில் ஒரு வாய்மொழி உண்டு. அப்படி தான் இப்போது மாறியிருக்கிறது சைதன்யா-சமந்தா திருமண வாழ்க்கை.


அக்.6ல் தொடங்கி அக்.2ல் முடிந்த வாழ்க்கை!




இன்னும் 4 நாட்களில் சைதன்யா-சமந்தா ஜோடியின் 4வது ஆண்டு திருமண நாள் வர உள்ளது. சில வாரங்களாகவே சமந்தா-சைதன்யா பிரிகிறார்கள் என்கிற செய்தி பரவலாக வந்தது. இருவரும் அதை மறுத்தனர். சில நேரங்களில் அந்த கேள்வியை வெறுத்தனர். சரி இதுவும் ஒரு வித வதந்தி தான் போல என்று நினைத்திருந்த நிலையில் தான், இன்று மாலை இருவருமே ஒரு மித்த கருத்தாக தங்கள் பிரிவை அறிவித்தனர். அதற்கான காரணமாக பல்வேறு யூகங்களும், செய்திகளும் வந்து கொண்டிருக்கின்றன. எது எப்படி பார்த்தாலும், இது ஒரு கணவன்-மனைவிக்கு இடையேயான பிரச்சனை. டெல்லிக்கு ராஜாவானாலும் பள்ளிக்கு பிள்ளை என்பார்கள். அது போல தான், என்னதான் பிரபலங்களாக இருந்தாலும் திருமண வாழ்க்கையில், கணவன்-மனைவி தான். ஒவ்வொரு வீட்டில் இருப்பதைப் போன்ற பிரச்சனைகளும், சர்சைகளும் அவர்களுக்குள்ளும் வந்திருக்கும்.




அது அவர்களின் சொந்த விவகாரம். ஆனாலும், கூடும் போது அவர்கள் அதை உலகறிய வெளிப்படுத்திய விதமும், அந்த கொண்டாட்டங்களை நாடே கொண்டாடியதும், அதற்குள் அந்த கொண்டாட்டம் முடிவுக்கு வந்ததும் தான் இப்போது பேசும் பொருளாக மாற காரணம். காதல்... கூடுவதில் மட்டுமல்ல... வாழ்வதிலும் இருக்க வேண்டும். இல்லையேல் பிரிவுகள் சரிவுகளாய் பின் தொடரும் என்பதற்கு சமந்தா-சைதன்யா திருமணமும் உதாரணமாகிவிட்டது.