தமிழ்நாட்டில் பிறந்து தென்னிந்திய சினிமாவில் பலரையும் கவர்ந்த நடிகை சாய் பல்லவி இன்று தனது 31வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். 


விதிகளை உடைத்த பெண் 


சினிமாவைப் பொறுத்தவரை முக லட்சணம் சார்ந்த பெண்களை மட்டுமே கொண்டாடப்படுவார்கள். ஆனால் அவற்றிற்கு மத்தியில் நம்மை சுற்றி இருக்கும் பெண்களைப் போல பருக்கள் நிரம்பிய முகத்துடன் அறிமுகமாகி அழகின் விதிகளை உடைத்தவர் “சாய் பல்லவி”. என்னதான் 2005 ஆம் ஆண்டு சினிமாவில அறிமுகமானாலும் தென்னிந்திய சினிமா அவரை 2015 ஆம் ஆண்டு தான் கொண்டாட தொடங்கியது. 


சாய்பல்லவி பின்னணி 


1992 ஆம் ஆண்டு கோத்தகிரியில் பிறந்த சாய் பல்லவி, கோவையில் பள்ளிப்படிப்பையும், ஜார்ஜியாவில் மருத்துவ படிப்பையும் முடித்தார். சிறு வயது முதலே அவருக்கு நடனத்தில் தீராத காதல் இருந்துள்ளது. அதனால் நடிக்க வருவதற்கு முன்பே பல நடன நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார். இவருக்கு ஒரு தங்கை உண்டு. இருவரும் இரட்டை சகோதரிகள் என்பது பலரும் அறியாத விஷயம்,


மலர் டீச்சராக கொண்டாடப்படும் சாய்பல்லவி


2005 ஆம் ஆண்டு வெளியான கஸ்தூரி மான்,  2008 ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ‘தாம் தூம்’ படங்களில் ஒரு காட்சியில் சாய் பல்லவி நடித்திருப்பார். ஆனால் 2015 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான “பிரேமம்” படம் தான் அவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. ஒரு ரியாலிட்டி ஷோவின் வீடியோவை பார்த்தே அப்படத்தின் இயக்குநர் சாய் பல்லவியை இப்படத்தொல் நடிக்க வைத்தார். பிரேமம் படத்தில் “மலர் டீச்சர்” கேரக்டரில் நடித்த சாய் பல்லவியை மலையாளம், தமிழ் சினிமா ரசிகர்கள் கொண்டாடினர். 


இதனைத் தொடர்ந்து தமிழில் கார்த்தி நடித்த மெட்ராஸ் படத்தில் சாய் பல்லவியை ஹீரோயினாக நடிக்க வைக்க அப்படத்தின் இயக்குநர் பா.ரஞ்சித் விரும்பினார். ஆனால் படிப்பை காரணம் காட்டி அந்த வாய்ப்பை சாய் பல்லவி மறுத்தார். மலையாளத்தில் பல வெற்றிப் படங்களில் நடித்த அவர், தமிழில் தியா படம் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்தார். 


தொடர்ந்து மாரி 2 படத்தில் “அராத்து ஆனந்தி”யாக மாஸ் காட்டினார்.இப்படத்தி  இடம் பெற்ற ரௌடி பேபி பாடல் மூலம் பட்டித் தொட்டியெங்கும் அவர் பிரபலமானார். இதன்பின்னர் சூர்யா நடித்த என்.ஜி.கே, பாவகதைகள் கார்கி போன்ற தேர்ச்சியாக கதைகளை கொண்ட படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். தெலுங்கிலும் ஷியாம் சிங்க ராய் படம் மூலம் ரசிகர்களை கவர்ந்தார். 


சாய் பல்லவி என்னதான் முக அழகிற்காக கேலி செய்யப்பட்டாலும், அவர் பிறருக்கு முன்மாதிரியாக அதே அழகால் ரசிகர்களை கவர்கிறார். அழகு க்ரீம்களுக்கான விளம்பரங்களில் நடிக்க வந்த வாய்ப்பை மறுத்த அவர், ‘க்ரீம்களால் அழகு கூடும் என்று தான் நம்பவில்லை’ என சொன்னது அவர் மீதான மரியாதை அதிகரித்தது என்றே சொல்லலாம். அப்படியான சாய் பல்லவிக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்..!