நடிகர் ரகுவரன் இருந்திருந்தால் சினிமாவின் இந்தக் கட்டத்தை மிகவும் நேசித்திருப்பார் என நடிகை ரோகிணி உருக்கமாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். 


தமிழ் சினிமாவின் மிக முக்கியமான வில்லன் நடிகர்களில் ஒருவர் “ரகுவரன்”.. அவரின் உயரம் போல அவருடைய அன்பும் இருப்பும் தமிழ் சினிமாவில் மிகப்பெரியது. அப்படியான ரகுவரனுக்கு இன்று 15 ஆம் ஆண்டு நினைவு தினமாகும். கேரளம் மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் பிறந்த ரகுவரன் 1982 ஆம் ஆண்டு வெளியான ஏழாவது மனிதன் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.  


அவருக்கு 1986 ஆம் ஆண்டு சம்சாரம் அது மின்சாரம் படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. தொடர்ந்து ரஜினிகாந்த், சத்யராஜ், விஜயகாந்த், விஜய், அஜித், அர்ஜூன் உள்ளிட்ட பலரின் படங்களில் வில்லனாகவும், முக்கிய கேரக்டர்களிலும் நடித்துள்ளார். இதனிடையே 2008 ஆம் ஆண்டு ரகுவரன் ரகுவரன் 2008 ஆம் ஆண்டு மார்ச் 19 ஆம் தேதி மரணமடைந்தார். அதிகப்படியான மது அருந்தியதால் அவரின் உடல் உறுப்புகள் செயலிழந்து உடல்நலக்குறைவு ஏற்பட்டு மரணம் நிகழ்ந்ததாக சொல்லப்பட்டது. 


அவர் கடைசியாக யாரடி நீ மோகினி படத்தில் தனுஷூக்கு அப்பாவாக நடித்திருந்தார். அவரின் மறைவு இன்றளவும் பலருக்கும் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாக உள்ளது. பலரும் ரகுவரனின் வில்லத்தனத்தை மறக்க முடியவில்லை என அவரின் ஒவ்வொரு படங்கள் டிவியில் ஒளிபரப்பாகும்போதும் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவிப்பதை காணலாம். 


இதனிடையே 1996 ஆம் ஆண்டு நடிகை ரோகிணியை காதல் திருமணம் செய்துக் கொண்ட ரகுவரன் 2004 ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார். இவர்களுக்கு ரிஷி என்ற மகன் உள்ளார். கணவரை பிரிந்தாலும் பல நேர்காணல்களிலும், பதிவுகளிலும் ரகுவரனை பற்றிய நினைவுகளை ரோகிணி பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் அவரின் நினைவு தினத்தை முன்னிட்டு ரோகிணி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். 


அதில், “மார்ச் 19, 2008 ஒரு சாதாரண நாளாகத் தொடங்கியது, ஆனால் எனக்கும் ரிஷிக்கும் எல்லாவற்றையும் மாற்றியது. ரகு இருந்திருந்தால் சினிமாவின் இந்தக் கட்டத்தை மிகவும் நேசித்திருப்பார், மேலும் ஒரு நடிகராகவும் அவர் மகிழ்ச்சியாக இருந்திருப்பார்” என ட்விட்டர் பக்கத்தில் ரோகிணி தெரிவித்துள்ளார். இதனை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.