தென்னிந்திய சினிமாவில் மிக முக்கிய நடிகராக இருந்தவர் ரகுவரன். தான் பெற வேண்டிய உயரங்களை அடையும் முன்பே ரகுவரன் மறைந்தது, தென்னிந்திய திரையுலத்திற்கு மிகப் பெரிய இழப்பு. முதிர்ச்சி பெற்ற நடிகராக, ரகுவரன் நடித்த வில்லன் வேடங்களும், குணசித்திர வேடங்களும் இன்றும் தென்னிந்திய சினிமாவின் பெருமையாகக் கருதப்படுகின்றன. 


இரண்டு முறை ஃப்லிம்ஃபேர் விருதுகளைப் பெற்ற தமிழ் நடிகரான ரகுவரன், கடந்த 2008ஆம் ஆண்டு நீரிழிவு நோயின் அதீத தாக்கத்தால் சென்னையில் மரணமடைந்தார். கடந்த 1982ஆம் ஆண்டு, `ஏழாவது மனிதன். படத்தில் அறிமுகமான நடிகர் ரகுவரன், `ஒரு மனிதனின் கதை’ திரைப்படத்தில் தனது நடிப்பிற்காகப் பெரும் பாராட்டுகளைப் பெற்றார். கடந்த 1996ஆம் ஆண்டு, சக நடிகையான ரோஹிணியைத் திருமணம் செய்துகொண்டார் ரகுவரன். ரகுவரனும், ரோஹிணியும் கடந்த 2004ஆம் ஆண்டு பிரிந்ததோடு, விவாகரத்தும் பெற்றனர். கடந்த 1998ஆம் ஆண்டு, இந்தத் தம்பதியினருக்கு ரிஷி வரன் என்ற மகன் பிறந்தார். 



ஒவ்வொரு ஆண்டும், ரகுவரனின் பிறந்த நாள் அன்றும், நடிகை ரோஹிணி, இதுவரை ரகுவரனின் பெரிதும் வெளியாகாத படங்களை வெளியிட்டு வருகிறார். விவாகரத்து பெற்ற போதும், தான் ரகுவரனை மிஸ் செய்வதாகக் கூறுகிறார் நடிகை ரோஹிணி. கடந்த 2019ஆம் ஆண்டு, ரகுவரனின் படத்தைப் பதிவிட்டு, `அவர் இல்லாமல் எதுவும் ஒரே போல இல்லை. அவர் இருந்திருந்தால் அவருக்கு 61 வயதாகி இருக்கும்’ என்று நடிகை ரோஹிணி குறிப்பிட்டிருந்தார்.


 



இந்நிலையில் நடிகை ரோஹிணி கடந்த ஆண்டு தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ரகுவரனின் படத்தைப் பதிவிட்டு, `இதுதான் அவருக்கு மிகவும் பிடித்த புகைப்படம். அவரை மிஸ் செய்கிறேன்’ என்று ரகுவரனின் பிறந்த நாளை முன்னிட்டு பதிவிட்டிருந்தார். தொடர்ந்து இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் ரகுவரனும் தங்கள் மகன் ரிஷி வரன் குழந்தையாக இருந்த போது எடுத்த புகைப்படத்தைப் பதிவிட்டுள்ளார்.


 






ரகுவரன், ரோஹிணி ஆகிய இருவரும் மூன்று திரைப்படங்களில் ஒன்றாக நடித்துள்ளனர். மலையாளத்தில் `காக்கா; `ருக்மா’ ஆகிய திரைப்படங்களிலும், தமிழில் `தொட்டா சிணுங்கி’ என்ற திரைப்படத்திலும் இருவரும் ஒன்றாக நடித்துள்ளனர். ரகுவரன் `சம்சாரம் அது மின்சாரம்’, `ஆஹா’ ஆகிய படங்களுக்காகவும், சூப்பர்ஸ்டார் ரஜினியுடன் `சிவா’, `ராஜா சின்ன ரோஜா’, `முத்து’, `பாட்ஷா’, `அருணாச்சலம்’, `சிவாஜி’ ஆகிய படங்களிலும் நடித்து புகழ்பெற்றவர். 


நாளை (டிசம்பர் 11) மறைந்த நடிகர் ரகுவரனின் பிறந்தநாள்.