இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக பதவி வகித்து வந்த பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது வீராங்கனைகள் சிலர் பாலியல் புகார் கொடுத்ததால் அவர் இனி தலைவருக்கான தேர்தலில் நிற்க கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனால் பிரிஜ் பூஷன் சரண் சிங் நண்பரும் உதவியாளருமான சஞ்சய் சிங் தேர்தலில் போட்டியிட்டார். 


 



வீராங்கனைகளின் போராட்டம் : 


அவர் இந்த தேர்தலில் நிற்க கூடாது என புகார் அளித்த வீராங்கனைகள் அனைவரும் மத்திய விளையாட்டு துறை அமைச்சர் அனுராக் தாக்கூரை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தனர். அந்த வீராங்கனைகளில் ஒருவராக இருந்தவர் மல்யுத்த வீராங்கனை சாக்‌ஷி மாலிக். இதை எதிர்த்து வீராங்கனைகள், 40 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டனர். 



அதற் பிறகு வெளியான தேர்தல் முடிவுகளில் போட்டியிட்ட 15 இடங்களில், சஞ்சய் சிங் அணியை சேர்ந்த 13 பேர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தல் முடிவால் சாக்‌ஷி மாலிக் மற்றும் போராட்டம் செய்த மற்ற வீராங்கனைகளும் மிகுந்த மனவேதனை அடைந்தனர். அவர்களின் உண்மையான போராட்டத்திற்கு எந்த ஒரு பலனும் கிடைக்கவில்லை என வருத்தத்தில் இருந்தனர். 


அதிரடி முடிவு : 


இதன் காரணமாக மல்யுத்த வீராங்கனை சாக்‌ஷி மாலிக் தான் ஓய்வு பெறுவதாக கண்ணீர் மல்க அறிவித்தார். அவரின் ஓய்வு குறித்த அறிவிப்பை  பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தெரிவிக்கும் போது தன்னுடைய ஷூவை எடுத்து மேஜை மீது வைத்தது அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. 


 



ரித்திகாவின் உருக்கமான போஸ்ட் : 


சாக்‌ஷி மாலிக் தனது ஓய்வை அறிவித்ததை அடுத்து நடிகையும் குத்துச்சண்டை வீராங்கனையுமான ரித்திகா சிங் தனது சோசியல் மீடியா பக்கம் மூலம் தனது கவலையை பதிவு மூலம் தெரிவித்துள்ளார்.  
"சாக்‌ஷி மாலிக் போன்ற ஒரு வீராங்கனை இது போன்ற ஒரு முடிவு எடுக்க தள்ளப்பட்டதை பார்க்கும் போது இதயம் நொறுங்குகிறது. ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தவர் சாக்‌ஷி மாலிக் . அவரின் இத்தனை ஆண்டு கனவு, உழைப்பு நம்பிக்கையை கைவிட்டு விலகுகிறேன் என சொல்வது மிகவும் மோசமான ஒரு நிலை. போராட்டத்தில் ஈடுபட்ட போது அவமரியாதையோடு நடத்தி இந்த நிலைக்கு தள்ளிவிட்டனர். இது மிகவும் கொடுமையானது" என் பதிவிட்டுள்ளார் ரித்திகா சிங். 


 


ரித்திகா சிங் திரைப்பயணம் : 


இறுதிச்சுற்று திரைப்படம் மூலம் நடிகையாக அறிமுகமான ரித்திகா சிங் முதல் படத்திலேயே ரசிகர்களின் கவனம் பெற்றார். அதை தொடர்ந்து ஓ மை கடவுளே, சிவலிங்கா, ஆண்டவன் கட்டளை, கொலை, கிங் ஆஃப் கோத்தா உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் ஹிந்தி திரைப்படங்களிலும் பிஸியாக நடித்து வருகிறார்.