மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேரடியாக மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடிக்கு டிசம்பர் 26 ஆம் தேதி வரவிருப்பதாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 


கடந்த டிசம்பர் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் தென்மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதன் காரணமாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதில் நெல்லையில் இயல்பு நிலை திரும்பி விட்ட நிலையில் தூத்துக்குடியில் மெல்ல மெல்ல மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்ப தொடங்கியுள்ளது. அந்த மாவட்டத்தில் உள்ள ஏரல் பேரூராட்சி கடுமையான பாதிப்பை சந்தித்துள்ள நிலையில் அங்கு நிவாரணப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. 


இதனிடையே பிரதமர் மோடியை டெல்லியில் சந்தித்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேரிடர் நிவாரண நிதியாக நிரந்தர தீர்வு பணிகளுக்கு 12 ஆயிரத்து 659 கோடி நிதி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால் மத்திய அரசு முன்னதாக மிக்ஜாம் புயல் வந்த பிறகு ரூ.450 கோடி ஒதுக்கியது. தமிழ்நாடு மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் நிவாரண நிதியை விடுவிக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசு கோரிக்கை விடுத்து வருகிறது. 


இதுதொடர்பாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இடையே கருத்து மோதல் வெடித்தது. இப்படியான நிலையில் கோவையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, “குஜராத்தை புயல் தாக்கிய போது, ரூ.9,836 கோடி கேட்கப்பட்ட நிலையில், மத்திய அரசு உடனடியாக நிவாரணத் தொகையாக ஆயிரம் கோடி ஒதுக்கினார்கள். அதன்பிறகு மீதமுள்ள ரூ.8, 836 கோடி ரூபாய் கொடுக்கவில்லை. அதற்கு காரணம்,  மத்திய அரசு ஆய்வு குழு கொடுத்த அறிக்கையில் இருக்கும், மாநில அரசு கேட்கும் தொகைக்கும் வித்தியாசம் இருந்திருக்கும்.


அதேபோல் 2021, 2022 காலக்கட்டத்தில் குஜராத்துக்கு கொரோனா தொற்றை சமாளிக்க வழங்கப்பட்ட நிதி ரூ.304 கோடி. தமிழ்நாட்டு வழங்கப்பட்டது ரூ.868 கோடியாகும். இந்த மாதிரி பல உதாரணங்களை நான் சொல்ல முடியும். ஆனால் திமுக சொல்லும் பொய்யை தோலுரிக்க விரும்பவில்லை. மத்திய அரசை பொறுத்தவரை, பேரிடரை பொறுத்தவரை சேதம் பொறுத்து தான் நிதி கொடுப்பார்கள். 


ஆனால் தமிழ்நாட்டில் தென் மாவட்டங்களில் மாநில அரசு இன்னும் பாதிப்பை மதிப்பீடு செய்யவில்லை. சென்னை மழை வெள்ள பாதிப்பு தொடர்பாக நிதி கேட்டுள்ளார்கள். விரைவில் மத்திய அரசு நிதி கொடுப்பார்கள் என நம்புகிறோம்.அதற்கு முன்பாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேரடியாக தூத்துக்குடிக்கு டிசம்பர் 26 ஆம் தேது வருகிறார்” என கூறினார். 


தொடர்ந்து பேசிய அவர், “திமுகவினர் அடுத்ததாக வானிலை மையத்தின் மீது பொய் சொல்கிறார்கள். தன்னுடைய கையாளாகாத தனத்தை மறைக்க சம்பந்தமே இல்லாதவர் மேலே பழியை போடுகிறார்கள். திமுக ஆசைப்படுவது மாதிரி வானிலை ஆய்வு மையம் கருப்பு, சிவப்பு கொடியெல்லாம் கொடுக்காது. மஞ்சள், சிவப்பு எச்சரிக்கை மட்டுமே கொடுக்க முடியும். 


டிசம்பர் 12 ஆம் தேதி மழை எச்சரிக்கை விடுக்கப்போட்ட போது திமுகவில் ஒரு குழு சேலத்தில் திமுக இளைஞரணி மாநில மாநாடு நடத்துவதில் அக்கறையோடு இருந்தார்கள். இந்தியா கூட்டணி கூட்டத்துக்கு போவதற்கு முதலமைச்சர் அக்கறையோடு இருந்தார். அங்க போய் விட்டு  போகிற போக்கில் பிரதமர் மோடியை சந்தித்துள்ளார். மத்திய அரசுடன் தமிழ்நாடு அரசு விரோதப் போக்கை கடைபிடித்து வருகின்றது” என அண்ணாமலை குற்றம் சாட்டினார்.