எனக்கு தளபதி விஜய் அண்ணா என்றால் ரொம்ப பிடிக்கும் என நேர்காணல் ஒன்றில் சின்னத்திரை நடிகை ரவீனா தாஹா தெரிவித்தது மீண்டும் வைரலாகியுள்ளது. 


பிக்பாஸ் நிகழ்ச்சியில் சின்னத்திரை நடிகை ரவீனா தாஹா போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டுள்ளார். விஜய் டிவி சீரியலில் கலக்கிக் கொண்டிருந்த அவரை பிக்பாஸ் நிகழ்ச்சி மேலும் பிரபலப்படுத்தியுள்ளது. ரவீனா 2018 ஆம் ஆண்டு தமிழில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற ராட்சசன் படத்தில் பள்ளி மாணவியாக அசத்தியிருந்தார். அதுவே ரசிகர்களின் அவருக்கான அடையாளமாக மாறியது. 


இப்படியான நிலையில் நேர்காணல் ஒன்றில் நடிகர் விஜய்யுடனான முதல் சந்திப்பு குறித்து ரவீனா பேசிய பழைய வீடியோ ஒன்று வைரலாகியுள்ளது. அதில், “எனக்கு தளபதி அண்ணா என்றால் ரொம்ப பிடிக்கும். நான் அவரோட மிகப்பெரிய ரசிகை. எனக்கு அவருடன் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால் நான் விஜய்யுடன் நடிக்க எந்தவித முயற்சியும் அப்போது எடுக்கவில்லை. நான் கதை சொல்லப் போறோம் என்ற படத்தில் நடித்திருந்தேன். அந்த படத்தோட உதவி இயக்குநர்  பாலா என்பவர் தான் என்னிடம் இந்த மாதிரி விஜய்யின் ஒரு படத்துக்கு குட்டி பொண்ணு ரோல் இருக்கு. ஆள் தேடுறாங்க. நீ வேணும்னா ஆடிஷன் அட்டெண்ட் பண்ணி பாருன்னு கூப்பிட்டாங்க.






அந்த படத்தோட ஷூட்டிங் நடந்துட்டு இருக்க லோகேஷன்ல தான் ஆடிஷன் போச்சு. அங்க போன என்னை போட்டோஸ்லாம் எடுத்து பார்த்தாங்க. நான் செலக்ட் ஆகிட்டேன். அப்புறமா என்னோட முதல் நாள் ஷூட் அன்னைக்கு தளபதி அண்ணா வர்றாங்க. நான் வாயை பொளந்துட்டு ஆச்சரியமா பார்த்துட்டு இருக்கேன். அப்போ பாலா அண்ணா வந்துட்டு ‘என்ன போய் பேசுனீயா?’ என கேட்க, நான் இல்லை என சொன்னேன். வா..வா போய் பேசலாம் என சொல்லி கூட்டிட்டு போனார். முதல்முறையாக பேசும் போது விஜய் அண்ணா ரொம்ப ஸ்வீட்டா பேசுனாங்க. ‘ஹாய் டா.. என்ன பண்றீங்க.. பெயர் என்ன.. என்ன படிக்கிறீங்க’ அப்படியெல்லாம் கேட்டு பேசுனாங்க. அந்த அனுபவத்தை என்னால் மறக்க முடியாது” என ரவீனா தாஹா தெரிவித்துள்ளார். 


ரவீனா சொன்ன அந்த படம் 2014 ஆம் ஆண்டு விஜய், மோகன்லால், காஜல் அகர்வால், சூரி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான ஜில்லா படமாகும். இதில் ஒரு சிறுமி வேடத்தில் ரவீனா நடித்திருப்பார். அதனை இப்போது பார்த்தால் ரவீனாவா இது என கேட்க தோன்றும் அளவுக்கு சற்றே உடல் எடை அதிகரித்த குழந்தையாக இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.