சென்னை மற்றும் சுற்றுவட்டாரங்களில் பெய்து வரும் மழை காரணமாக சென்னைப் பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. மறுதேர்வு எப்போது என்ற விவரத்தை பல்கலைக்கழகம் வெளியிடவில்லை.


சென்னைப் பல்கலைக்கழகம் சார்பில், இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளுக்கான செமஸ்டர் தேர்வுகள் நடைபெற்று வந்தன. இதற்கிடையே 2 நாட்களாக மழை தொடர்ச்சியாகவும் விட்டு விட்டும் பெய்து வருகிறது.


இதுதான் காரணம்!


தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து நேற்று ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக மாறியது. இது தற்போது தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலை கொண்டுள்ளது. இது இன்றைய தினம் மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.


மேலும் இந்த தாழ்வு மண்டலம் வடமேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் 02-12-2023 வாக்கில் புயலாக வலுப்பெறக் கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் நேற்று முதல் பலத்த மழை பெய்து வருகிறது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதை முன்னிட்டு, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.


மறுதேர்வு எப்போது?


இந்த நிலையில், சென்னைப் பல்கலைக்கழகம் சார்பில், இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளுக்கான செமஸ்டர் தேர்வுகள் நடைபெற்று வந்தன. 


கனமழை காரணமாக இந்தத் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. எனினும் மறு தேர்வு எப்போது என்ற விவரத்தை பல்கலைக்கழகம் வெளியிடவில்லை.