திரைப்படங்களில் இனிமேல் தன்னை வேறு மாதிரி ரசிகர்கள் பார்க்கப் போகிறீர்கள் என நடிகை ராஷி கண்ணா தெரிவித்துள்ளார். 


ராஷி கண்ணா:


2013 ஆம் ஆண்டு வெளியான மெட்ராஸ் கஃபே என்ற இந்தி படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடிகை ராஷி கண்ணா அறிமுகமானார். இந்த படம் ரூ.100 கோடிக்கும் மேல் வசூலை பெற்றது. இந்த படத்தில் ராஷி கண்ணா நடிப்பால் ஈர்க்கப்பட்ட நடிகர் ஸ்ரீனிவாஸ் அவசராலா தான் இயக்குனராக அறிமுகமான ஊஹலு குசகுசலாடே படத்தில் கதாநாயகியாக நடிக்க அவரை அணுகினார்.


தெலுங்கு, தமிழில் அசத்தல்:


இதன்பின்னர் ஜில், சிவம், ஹைப்பர். ஜெய் லவ குசா, ராஜா தி கிரேட், வில்லன், ஆக்ஸிஜன் என பல தெலுங்கு படங்களில் ராஷி கண்ணா நடித்தார். தொடர்ந்து தமிழில் 2018 ஆம் ஆண்டு தான் அதர்வா நடித்த இமைக்கா நொடிகள் படத்தின் மூலம் அறிமுகமானார்.  இதன்மூலம் ராஷி கண்ணாவுக்கு ஏராளமான ரசிகர்கள் கிடைத்தனர். 


இதனையடுத்து அடங்க மறு, அயோக்யா, சங்கத்தமிழன், துக்ளக் தர்பார், அரண்மனை 3, திருச்சிற்றம்பலம், சர்தார் என தமிழ் படங்களில் ராஷி கண்ணா நடித்துள்ளார். சமீபத்தில் ஷாகித் கபூர் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ஃபார்ஸி  என்ற வெப் சீரிஸில் ராஷி கண்ணா நடித்திருந்தார்.


அழகை வைத்து நிலைக்க முடியாது:


இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகை ராஷிகண்ணா, நடிகைக்கு அழகு முக்கியம் தான் என்றாலும் அழகை மட்டுமே வைத்துக்கொண்டு சினிமாவில் என்றைக்கும் நிலைத்து இருக்க முடியாது. ரசிகர்கள் மனதில் நீண்ட காலம்  இடம் பிடித்து இருக்கவும்,  பட வாய்ப்புகளை அதிகமாக பெறுவதற்கும்  கதை மற்றும் கதாபாத்திரங்களை வித்தியாசமாக தேர்வுசெய்து நடிக்க வேண்டும் என உணர்ந்துள்ளேன். 


இதுவரை என்னை ஜாலியான கேரக்டரில் பார்க்க ரசிகர்கள் விரும்பி அதுபோன்ற கதாபாத்திரங்களே கிடைத்தது. உண்மையில் நடிப்பு திறமையை வித்தியாசமான கதாபாத்திரங்கள் மூலமாக மட்டும் தான் வெளிப்படுத்தமுடியும். எனவே இனிமேல் அது மாதிரியான கதை மற்றும் கேரக்டரில் நடிக்க முடிவு செய்து இருக்கிறேன். அதனால் இனிமேல் என்னை வேறுமாதிரி ரசிகர்கள் பார்க்கப்போகிறார்கள் என ராஷி கண்ணா கூறியுள்ளார்.