Thiruvannamalai ATM Theft: ஏ.டி.எம். கொள்ளையர்களுக்கு 3-ந் தேதி வரை நீதிமன்ற காவல் - நீதிபதி உத்தரவு

திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி 12 ஆம் தேதி அதிகாலையில் திருவண்ணாமலை, கலசப்பாக்கம், போளூர் ஆகிய பகுதிகளில் உள்ள 4 ஏடிஎம் மையங்களில் ரூ.72 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டது.

Continues below advertisement

திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்ற ஏடிஎம் கொள்ளையில் கைது செய்யப்பட்ட 2 குற்றவாளிகளும் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை 3-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Continues below advertisement

72 லட்சம் கொள்ளை:

கடந்த பிப்ரவரி 12 ஆம் தேதி  திருவண்ணாமலை மாவட்டத்தில்  கலசப்பாக்கம், போளூர் ஆகிய பகுதிகளில்  4 ஏடிஎம்களில் அடுத்தடுத்து கொள்ளையடிக்கப்பட்டது. அதிகாலையில் நடந்த இந்த சம்பவத்தில் மொத்தம்  ரூ.72 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வேலூர் சரக டி.ஐ.ஜி. 4 மாவட்ட எஸ்.பி.க்கள் உள்ளிட்டோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர். தொடர்ந்து குற்றவாளிகளை பிடிக்க  9 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டையில் போலீசார் ஈடுபட்டு வந்தனர். 

சம்பவ இடங்களில் இருந்த சி.சி.டி.வி. காட்சிகள், முக்கிய வழித்தடங்களில் சென்ற வாகனங்கள் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு நடந்த விசாரணையில் இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் வடமாநிலத்தவர்கள் என்பது முதற்கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டது. இதனையடுத்து கொள்ளையில் ஈடுபட்ட 6 பேரும் கர்நாடக மாநிலத்தில் உள்ள கோலார் பகுதியில் தங்கியிருந்து கொள்ளையடிக்க திட்டமிட்ட இடங்களை நோட்டமிட்டதும் விசாரணையில்  தெரியவந்தது.

கொள்ளை கூட்டத் தலைவன் கைது:

இதனைத் தொடர்ந்து ஆந்திரா, கர்நாடகா, குஜராத், ஹரியானாவுக்கு தனிப்படை போலீசார் சென்றனர். அங்கு ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளை கும்பல் தலைவனான முகமது ஆரிப் மற்றும்  அவனது கூட்டாளியான முகமது ஆசாத் இருவரும் ஹரியானாவில் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஏ.டி.எம். மையங்களில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட ரூபாய் 3 லட்சம் பணம், கொள்ளைக்கு பயன்படுத்திய வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. 

அவர்கள் இருவரும் விமானம் மூலம் தமிழ்நாடு அழைத்து வரப்பட்ட நிலையில் திருவண்ணாமலை நகர காவல் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டனர். இதனைத் தொடர்ந்து மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட முகமது ஆரிப் மற்றும் முகமது ஆசாத் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்கள் இருவரையும் மார்ச் 3 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி கவியரசன் உத்தரவிட்டுள்ளார். 
Continues below advertisement
Sponsored Links by Taboola