பருத்திவீரன் படம் வெளியாகி இன்றோடு 17 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் அப்படம் பற்றி பிரியாமணி பகிர்ந்த தகவல்கள் சிலவற்றை காணலாம்.
2007 ஆம் ஆண்டு பிப்ரவரி 23 ஆம் தேதி அமீர் இயக்கத்தில் பருத்திவீரன் வெளியானது. இப்படத்தில் தான் கார்த்தி நடிகராக அறிமுகமானார். மேலும் பிரியாமணி, சரவணன், பொன்வண்ணன், கஞ்சா கருப்பு என பலரும் நடித்திருந்தனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்த இப்படம் தமிழ் சினிமாவின் அடையாளங்களில் ஒன்றாக மாறியது. கிட்டதட்ட ஒரு வருடமாக தியேட்டரில் வெற்றிகரமாக பருத்தி வீரன் ஓடியது.
இப்படம் பற்றி ஒரு நேர்காணலில் பிரியாமணி பேசியதாவது, “இந்த மாதிரி ஒரு படம் என் சினிமா கேரியரில் அமைந்தது சந்தோசமாக உள்ளது. ஆண்டுகள் பல கடந்தும் இன்னும் என்னை பார்ப்பவர்கள் முத்தழகு என்று அழைக்கிறார்கள். இதற்கு நான் அமீருக்கு தான் நன்றி சொல்ல வேண்டும். இது ரொம்ப ஸ்பெஷலான படமாக இருக்கிறது. அந்த படத்தில் சரிகமபதநி பாடல் தேனியில் ஷூட் செய்யப்பட்டது. கிட்டதட்ட மதியம் 12 மணி வெயிலில் பாறை மேல் உட்கார வைத்து இன்னைக்கு நாம இந்த சீன் எடுக்கப்போறோம் என சொன்னார்.
நானும் சரி என சொல்லிவிட்டேன். அந்த பாட்டில் இருக்கும் பாட்டிகள் எல்லாம் அந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள். வேலைக்கு சென்றவர்களை கூட்டி வந்து தலையை மட்டும் ஆட்டினால் போதும் என சொல்லி நடிக்க வைத்தார்.
என்னுடைய அம்மா வழியில் உள்ளவர்கள் இசை குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். நாகராவில் பாடலை ஓடவிட்டு உனக்கு பிடிச்ச மாதிரி நீ தாளம் போடு என சொல்லி விட்டார். அமீர் தான் பாட்டியை கிண்டல் செய்வது உள்ளிட்ட சில விஷயங்களை சொல்லிக் கொடுத்தார். அந்த காட்சியில் என் கையில் இருக்கும் குச்சி கூட அந்த பக்கம் கிடந்தது. அதேபோல் ஒரு காட்சியில் கார்த்தி என்னை அடிப்பது போல இருக்கும். அந்த காட்சி மதுரையில் எடுக்கப்பட்டது. எடுக்கும்போது மதியம் அதே 12 மணி வெயில். சரியான வெப்பம் நிலவும் நேரத்தில் மதியம் சாப்பாடும் கிடையாது. சாப்பாடு நேரம் என பார்த்தால் நானும் கார்த்தியும் மாலை 4 மணிக்கு தான் சாப்பிட்டோம்.
அந்த இடத்தில் வேறு ஏதோ காட்சி எடுக்கும்போது அமீர் ஒரு பள்ளம் தோண்டி வச்சாரு. அதில் தண்ணியை நிரப்பி இது அப்படியே இருக்கட்டும், மூட வேண்டாம் என விட்டு விட்டார். கிட்டதட்ட ஒருவாரம் அந்த குழியில் குப்பை, பூச்சிகள் என எல்லாம் இருந்தது. என்னிடம் வந்து கார்த்தி அடிப்பான், நீ விழணும் என சொன்னார். நான் நிஜமாகவே அடி வாங்குனேன். இந்த படத்துக்கு டப்பிங் பேசும் போது அமீர் தான் சொல்லி கொடுத்தார். ஆனால் கிளைமேக்ஸ் சீன் டப்பிங் பேச என்னால் முடியவில்லை. அந்த காட்சியை பார்த்து பார்த்து 4 நாட்கள் அழுதேன். அது படத்துக்கான எடிட் கிடையாது. அது ரஃப் எடிட் காட்சிக்கே நான் அப்படி அழுதேன். கடைசியில் அம்மாவும், அமீரும் தான் வேறு வழியில்லை. பண்ணிதான் ஆக வேண்டும். நேரம் வீணாக்க வேண்டாம் என சொல்லியதால் டப்பிங் பேசி முடித்தேன்” என பிரியாமணி கூறியிருந்தார்.