ஹரியானா எல்லையில் போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிக்கு பஞ்சாப் அரசு ரூ.1 கோடி நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த சுப்கரன் சிங்கின் குடும்பத்திற்கு ரூ.1 கோடி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவரது தங்கைக்கு அரசு வேலை வழங்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
வேளாண் விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை, விவசாய கடன் தள்ளுபடி, விவசாயிகளுக்கு ஓய்வூதியம், விவசாயிகள் மீது பதியப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய வேண்டும், போராட்டத்தின்போது உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க வேண்டும், மின்சார சட்டத் திருத்த மசோதாவை ரத்து செய்ய வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் டெல்லியில் பதட்டமான சூழல் காணப்படுகிறது. w
நாளுக்கு நாள் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. இந்த நிலையில் தான், ஹரியானா மாநிலம் கானௌரி எல்லையில் நேற்று மாலை போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மற்றும் தடுக்க முயன்ற போலீசார் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டது. இதில் விவசாயி ஒருவர் உயிரிழந்தார். போலீஸ் நடவடிக்கையின் போது தான் அவர் இறந்துவிட்டார் என்று அகில இந்திய கிசான் சபா குற்றம் சாட்டியுள்ளது. ஆனால், அதை ஹரியானா போலீசார் மறுத்துள்ளனர். விவசாயி உயிரிழந்த நிலையில், எல்லையில் அமர்ந்து தொடர்ந்து போராடுவோம் என்றும், டெல்லியை நோக்கி செல்லும் போராட்டம் இரண்டு நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்படுவதாகவும் விவசாயிகள் அறிவித்துள்ளனர்.
எல்லையில் உள்ள தடுப்புகளை உடைக்கும் முயற்சியை முறியடிப்பதற்காக, விவசாயிகள் மீது ஹரியானா காவல்துறை கண்ணீர் புகை குண்டுகளை வீசியது. அப்போது தான் அந்த விவசாயி சுட்டுக் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. விவசாயி யாரும் உயிரிழக்கவில்லை என ஹரியானா மாநில காவல்துறை விளக்கமளித்துள்ளது. ஆனால், விவசாயியின் உயிரிழப்பை கேட்டு மிகுந்த அதிர்ச்சி அடைந்ததாக பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த மான் கூறியுள்ளார். இந்நிலையில் தற்போது உயிரிழந்த விவசாயியின் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி நிவாரணம் வழங்கப்படும் என்றும் குற்றவாளி நிச்சயம் தண்டிக்கப்படுவார் என்றும் முதலமைச்சர் பகவந்த் மான் தெரிவித்துள்ளார்.