நடிகர் தனுஷுக்கு பாலிவுட்டிலும் அங்கீகாரம் கிடைக்கவில்லையா? அதுபோலதான். எங்களை ஏன் தென்னக நடிகர்கள் மற்றும் பாலிவுட் நடிகர்கள் என்று பிரித்துப் பார்த்து பெயர் வைக்கிறீர்கள் என கோபப்பட்டிருக்கிறார் ப்ரியாமணி
2003ம் ஆண்டு எவரே அட்டகாடு என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகை ப்ரியாமணி பல ஆண்டுகளாக மலையாளம், தமிழ் மற்றும் கன்னட படங்களில் பணியாற்றி வருகிறார். ஷாருக்கானுடன் இணைந்து சென்னை எக்ஸ்பிரஸ்’ படத்தில் நடித்ததன் மூலம் ஓரிரு இந்திப் படங்களிலும் அடுத்தடுத்து நடித்தார். தற்போது பான் இந்திய திரைக்கலைஞராக தொடர்ந்து திரையுலகில் கால் பதித்து வரும் ப்ரியாமணி அண்மையில் ஹங்காமா ஊடகத்துக்குப் பேட்டி அளித்திருந்தார். "நடிகர் தனுஷுக்கு பாலிவுட்டிலும் அங்கீகாரம் கிடைக்கவில்லையா? அதுபோலதான். எங்களை ஏன் தென்னக நடிகர்கள் மற்றும் பாலிவுட் நடிகர்கள் என்று பிரித்துப் பார்க்கிறீர்கள் என்று எனக்குத் தெரியவில்லை. நாங்கள் அனைவரும் இந்திய நடிகர்களே. நடிகர்கள் அங்கீகரிக்கப்படுகிறார்கள் அவர்களது உழைப்புக்கு மதிப்பளிக்கப்படுகிறது என்பது மகிழ்ச்சி அளிக்கிறது" என்று அவர் அந்தப் பேட்டியில் கூறியுள்ளார்.
பாமா கலபம், கொட்டேஷன் கேங் மற்றும் விராட பர்வம் உள்ளிட்ட அவரது வரவிருக்கும் அனைத்து படங்களிலும் பிரியாமணி மிகவும் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். தனது முந்தைய கதாப்பாத்திரங்களை விட வரவிருக்கும் கதாப்பாத்திரங்கள் வித்தியாசமாக இருக்கவேண்டும் என்பதை உறுதிப்படுத்தும் ப்ரியாமணி, "நான் நடிக்கும் கதாப்பாத்திரங்கள் ஒன்றுபோல இருக்கக் கூடாது என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். அதில் ஒரு ஒற்றுமை என்னவென்றால் நான் நடித்த எல்லா கதாபாத்திரங்களும் மிகவும் தைரியமானவர்கள், அவர்கள் சொல்ல விரும்புவதைச் சொல்ல அவர்கள் தயங்கமாட்டார்கள், அவர்களிடம் பாசாங்கு கிடையாது. நான் நடித்த அத்தனைக் கேரக்டர்களிலும் இந்த ஒற்றுமை இருப்பதை என்னால் பார்க்க முடிகிறது. இதைத் தவிர, நான் ஒரே மாதிரியான கதாப்பாத்திரங்களில் டைப்காஸ்ட் செய்யக்கூடாது என்று முடிவுடன் இருக்கிறேன்" என்கிறார் அவர்.
சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் ஹிட் டிராக் பாடலுக்குப் பிறகு தனக்கு வந்த சிறப்பான நடன வாய்ப்புகளை தான் தட்டிக்கழித்தது பற்றிக் கூறும் ப்ரியாமணி, "எனக்கு எப்பொழுதும் பாட்டுக்கு நடனம் ஆடுவதில் விருப்பம் கிடையாது. அதனால் சற்று ஒதுங்கியே இருந்தேன். ஆனால் அப்படி ஒதுங்கியிருக்கத் தேவையில்லை என சென்னை எக்ஸ்பிரஸ் எனக்கு உணர்த்தியது. அந்தப் படமும் படத்தின் பாடலும் சூப்பர் ஹிட். பட்டித்தொட்டி எங்கும் ஏதாவது ஒருவகையில் பாடல் ஒலித்துக்கொண்டுதான் இருக்கிறது. ஆனால், என் வாழ்நாள் முழுவதும் அதைத் தொடர்ந்து செய்ய நான் விரும்பவில்லை. பாலிவுட்டில் நல்ல பெயர் எடுக்க விரும்பினாலும் ஒருபாடலுக்கு மட்டுமே நடனமாடுபவர் என்கிற பெயரை நான் எடுக்க விரும்பவில்லை. அதனால் அதற்கு அடுத்து வந்த பாடல்களில் நடனமாடும் வாய்ப்புகளைத் தட்டிக்கழித்தேன். அது இன்றுவரை நான் எடுத்த சரியான முடிவுகளில் ஒன்று என நினைக்கிறேன்” என அவர் கூறியுள்ளார்.