மறைந்த இயக்குநர் மகேந்திரனை திருமணம் செய்து கொண்டதே என் வாழ்க்கையில் நான் செய்த மிகப்பெரிய தவறு என நேர்காணல் ஒன்றில் பழம் பெரும் நடிகை பிரேமி தெரிவித்துள்ளார். 


இன்றைய 2கே கிட்ஸ் ரசிகர்களுக்கு பிரேமி சீரியல் மூலம் நன்கு பரீட்சையமானவர். ஆனால் 1964 ஆம் ஆண்டு சினிமாவில் நடிக்க வந்த பிரேமி 90ஸ் கிட்ஸ் வரையிலான சினிமா ரசிகர்களுக்கு நன்கு அறிந்த முகம். அவர் ஒரு நேர்காணலில் தன்னுடைய சினிமா பயணம் பற்றி பேசியுள்ளார். 


அதில், “சினிமாத்துறைக்கு வந்து 60 ஆண்டுகள் ஆகிறது.நான் முதல்முறையாக பேட்டி கொடுக்கிறேன். நான் வெளியில் எங்கும் நடிகை என வெளிக்காட்டிக் கொள்ள மாட்டேன். முதலில் நடிப்பதில் எனக்கு பெரிய ஆர்வம் இல்லை. குடும்பத்தை காப்பாற்றுவதற்காக இந்த தொழிலுக்கு வந்தேன். நாம் கான்வென்ட் பள்ளியில் படித்த நிலையில் கன்னியாஸ்திரிகளுடன் தான் வளர்ந்தேன். அவர்களைப் போல இருக்க வேண்டும் என நினைத்தேன். ஆனால் சினிமாவுக்கு வந்து விட்டேன். என்னுடைய அப்பா சிவாஜி நடித்த அன்பு படத்தில் நடித்துள்ளார். அவருக்குள் இருந்த ஆர்வம் தான் நான் நடிகையாக காரணமாக அமைந்தது. 


நானும் சிவாஜி கணேசனும் தூரத்து உறவினர்கள். நான் நிறைய இயக்குநர்கள் படத்தில் நடித்திருந்தாலும் மிகவும் பிடித்தவர் பழம்பெரும் இயக்குநர் ஸ்ரீதர் தான். அதனால் இன்னைக்கும் அவரின் படங்கள் டிவியில் போட்டால் முதல் ஆளாக பார்ப்பேன். 70களின் காலகட்டத்தில் படங்கள் பண்ணிக் கொண்டிருந்தபோது தான் உதிரிப்பூக்கள் படம் வந்து என் வாழ்க்கையே தடம் மாறிப்போனது. 7 வருடம் சினிமாவில் நடிக்காமல் இருந்த என்னை என்னுடைய தோழியின் கணவரான ஜி.என்.ரங்கராஜன் தான் நடிக்க வேண்டும் என வற்புறுத்தி திரைத்துறைக்குள் கொண்டு வந்தார். 


இடைவெளி விழுந்ததால் திரைத்துறையில் எல்லாம் மாறிப்போய் இருந்தது. எல்லாமே வித்தியாசமாக இருந்தது. ரீ -எண்ட்ரீயில் ராமராஜன் நடித்த தங்கமான ராசா படத்தில் நடித்தேன். நிறைய ஹீரோக்களுக்கு அம்மாவாக நடித்தேன். 


எனக்கு மறைந்த இயக்குநர் மகேந்திரனை நடிகர் செந்தாமரை தான் அறிமுகம் செய்தார். தங்கப்பதக்கம் படத்தில் நல்லதொரு குடும்பம் பாடல் ஷூட்டிங்கில் அவரை காட்டினார். முதல்முறையாக நான் மகேந்திரனை பார்த்தேன். அதன்பிறகு முள்ளும் மலரும் படத்தின் ஆடிஷனுக்காக கூப்பிட்டார்கள். எனக்கு மனதில் ஏதோ நெருடல் இருந்ததால் போகவில்லை. ஆனால் உதிரிப்பூக்கள் படத்துக்கு இவர் தான் இயக்குநர் என தெரியாமல் ஆடிஷனுக்கு சென்று விட்டேன். அங்கே மகேந்திரன் இருந்தார்.


எங்கள் இருவருக்கும் பிடித்திருந்தது. மகேந்திரன் வாழ்க்கையில் அவர் திருமணம் ஆனவர் என தெரிந்தும் நான் குறுக்கிட்டு இருக்கக்கூடாது. அது தப்புதான். செஞ்ச தப்புக்கு தண்டனை அனுபவிச்சிட்டேன். 7 வருஷம் நாங்கள் ஒன்னா வாழ்ந்தோம். எங்களுக்கு ஒரு மகன் பிறந்தான். 7 வருடங்களுக்குப் பின் அவர் படங்கள் பண்ணாமல் போன காரணத்தால் 2 குடும்பத்தையும் சமாளிக்க கஷ்டப்பட்டார். அதனால் மகேந்திரன் என்னை விட்டு பிரிந்து சென்றார். அதன்பிறகு நான் பொருளாதார ரீதியாகவும், மன ரீதியாகவும் மிகவும் கஷ்டப்பட்டேன். என் அண்ணன் மற்றும் குடும்பத்தினர் அரவணைத்து கொண்டதால் நான் திரும்பவும் வேலைக்கு சென்று தனியாளாக என் பையனை வளர்த்து இன்றைக்கு மகன் நல்ல நிலையில் உள்ளான். 


மகேந்திரனுடன் வாழ்ந்த 7 ஆண்டுகாலத்தில் அவருக்கு பெரிய அளவில் வருமானம் இல்லாத காரணத்தால், நான் தையல் தைப்பேன், அப்பளம் போட்டு கொடுப்பது என பல வேலைகள் செய்தேன்” என அந்த நேர்காணலில் பிரேமி தெரிவித்துள்ளார்.