விஜய் பற்றி பூஜா ஹெக்டே
டோலிவுட் முதல் பாலிவுட் வரை பிரபல நடிகையாக வலம் வருகிறார் பூஜா ஹெக்டே. நடிப்பைக் காட்டிலும் பூஜா ஹெக்டேவின் நடனத்திற்கு பெரும் ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது. அரேபிக் குத்து , ரெட்ரோ படத்தில் கனிமா , தற்போது கூலி படத்தில் மோனிகா என கலக்கி வருகிறார். எச் வினோத் இயக்கத்தில் விஜயின் ஜன நாயகன் படத்தில் நாயகியாக நடித்து வரும் பூஜா ஹெக்டே விஜயுடன் பணிபுரிந்த அனுபவத்தை தி ஹாலிவுட் ரிப்போர்ட்டர் இந்தியாவுக்கு அளித்த பேட்டியில் பகிர்ந்துகொண்டுள்ளார்
என்னை கிளாமர் நடிகையாக மட்டும் பார்க்கிறார்கள்
" தென் இந்திய மொழியில் நான் நடித்த ஒரு சில படங்களைப் மட்டுமே பார்த்துவிட்டு பாலிவுட் இயக்குநர்கள் என்னை கிளாமர் நடிகையாக மட்டுமே பார்க்கிறார்கள். இதனால் இந்த ஆண்டு நான் என்னுடைய இமேஜை மாற்றும் படியான கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க முடிவு செய்தேன். அந்த வகையில் ரெட்ரோ படத்தில் என்னை நடிக்க வைத்ததற்கு நான் கார்த்திக் சுப்பராஜூக்கு நன்றி தெரிவிக்க வேண்டும் . " என பூஜா ஹெக்டே இந்த பேட்டியில் கூறினார்.
விஜய்க்கு அதை நீரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை
" ஜன நாயகன் படம் வரும் ஜனவரி மாதம் வெளியாக இருக்கிறது. படத்தின் இறுதி காட்சியை எடுக்கும் போது எனக்கு ரொம்ப வருத்தமாக இருந்தது. நான் அவருடைய படங்களைப் பார்த்து வந்திருக்கிறேன். அவருடன் பணியாற்றுவது என்பது ஒரு அமைதியான அனுபவம். விஜய் சார் செட்டில் ரொம்ப சில்லாக இருப்பார். தான் ஒரு மிகப்பெரிய சூப்பர்ஸ்டார் என்பது அவருக்கு தெரியும் ஆனால் அதை நிரூபிக்க வேண்டிய எந்த கட்டாயத்திலும் அவர் இல்லை. நான் பார்த்ததிலேயே ரொம்பவும் இனிமையான மனிதர் விஜய். ஆனால் அவருக்கு வேறு கனவுகள் இருக்கின்றன. அதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. ஜன நாயகன் ஆடியோ லாஞ்சில் அவரை சந்திக்க இருக்கிறேன். அதேபோல் சக நடிகர்களுடன் விஜய் தொடர்ச்சியாக சந்திப்பில் இருப்பவர்தான். " என ஜன நாயகன் படத்தில் விஜயுடன் பணியாற்றிய அனுபவம் பற்றி பூஜா ஹெக்டே தெரிவித்துள்ளார்