துள்ளுவதோ இளமை அபிநய்
நடிகர் தனுஷ் நாயகனாக அறிமுகமான துள்ளுவதோ இளமை படத்தில் நடித்து கவனமீர்த்தவர் நடிகர் அபிநய். இவர் கல்லீரல் பாதிப்பால் சில காலமாக தீவிர சிகிச்சையில் இருந்து வருகிறார். கல்லீரல் மாற்று சிகிச்சைக்கு ரு 27 லட்சம் தேவைப்படும் நிலையில் ஒரு சில மட்டும் அவருக்கு பண உதவி செய்துவந்தனர். நடிகர் பாலா அபிநயின் மருத்துவ சிகிச்சைக்கு ரூ 1 லட்சம் வழங்கினார். ஆனால் முன்னணி நடிகர்கள் யாரும் அவருக்கு உதவ முன்வராதது குறித்து பல தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர். குறிப்பாக அபிநயுடன் இணைந்து நடித்த தனுஷ் அவருக்கு ஏன் உதவ முன்வரவில்லை என பலர் கேள்வி எழுப்பினர். இப்படியான நிலையில் அபிநயின் மருத்துவ சிகிச்சைக்காக ரூ 5 லட்சம் வழங்கியுள்ளார் தனுஷ். அவரது இந்த செயல் பலரிடம் கவனமீர்த்துள்ளது
ஒரே படத்தில் அறிமுகமான இரு நடிகர்கள்
தனுஷ் மற்றும் அபிநய் இருவரும் துள்ளுவதோ இளமை படத்தில் அறிமுகமானவர்கள். இப்படம் வெளியானபோது அபிநய் தான் நாயகனாக நடித்திருக்க வேண்டும் தனுஷை ஏன் நடிக்க வைத்தார்கள் என பத்திரிகைகளில் கருத்துக்கள் வெளியாகின. அடுத்தடுத்து ஜங்ஷன் , சிங்கார சென்னை , பொன்மேகலை உள்ளிட்ட படங்களில் நாயகனாக நடித்தார் அபிநய். மலையாளத்திலும் சில படங்களில் நடித்தார். ஆனால் குறிப்பிட்டு சொல்லும்படியான வெற்றி அபிநய்க்கு கிடைக்கவில்லை. நடிப்பு தவிர்த்து பொருளாதார நெருக்கடியை சமாளிக்க பல படங்களில் டப்பிங் பேசியுள்ளார். பெரியளவில் சினிமாவில் வாய்ப்பு கிடைக்காததால் அம்மா உணவகத்தில் சாப்பிட்டு வந்ததாக அபிநய் அளித்த பேட்டியில் கூறியுள்ளார். சரியான கதைகளை தேர்வு செய்யாதது, தொடர் தோல்விகள், அம்மாவின் இறப்பு , என அபிநய் வாழ்க்கையில் தொடர் போராட்டங்களை சந்தித்து வந்துள்ளார். இப்படியான நிலையில் தான் அவருக்கு கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டு உடல் மெலிந்த நிலையில் போராடி வருகிறார்.
ஒரே படத்தில் இருவரும் அறிமுகமானாலும் நடிகர் தனுஷ் இன்று ரூ 120 கோடி வரை சம்பளமாக வாங்குகிறார். உலகளவில் அறியப்படும் பெரிய ஸ்டாராக இருக்கிறார் தனுஷ். மறுபக்கம் மருத்துவ சிகிச்சைக்கு பணமில்லாமல் உயிர் போனாலும் பரவாயில்லை என்கிற நிலையில் அபிநய். சினிமாவில் இந்த மாதிரியான சூழ் நிலைகள் எதார்த்தமான ஒன்றாகவே கருதப்படுகிறது என்றாலும் திரைத்துறையின் மேல் ஆர்வம் ஏற்பட்டு வரும் பலரது சொல்லாத தவிப்புகளுக்கு அபிநய் சான்று.