அஜித் நடித்த என்னை அறிந்தால் படத்தின் வில்லனாக நடித்த அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்தவர் பார்வதி நாயர். தொடர்ந்து நிமிர்ந்து நில், மாலை நேரத்து மயக்கம், உத்தம வில்லன் ஆகிய படங்களில் நடித்த அவர் கடைசியாக 2017 ஆம் ஆண்டு தமிழில் பார்த்திபன் இயக்கிய கோடிட்ட இடங்களை நிரப்புக படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். மலையாளம்,தெலுங்கு ஆகிய மொழிகளிலும் பல படங்களிலும் பார்வதி நாயர் நடித்துள்ள நிலையில், தற்போது கம் தகம் புத்தகம் என்ற மலையாளப் படத்திலும், பெயரிடப்படாத தெலுங்கு படத்திலும் நடித்து வருகிறார்.
இந்தநிலையில், சினிமா அனுபவங்கள் குறித்து பார்வதி நாயர் அளித்துள்ள பேட்டியில், “எல்லா துறையில் இருப்பவர்களுக்கும் அதிர்ஷ்டம் மிகவும் முக்கியம். அது ஒரு முறை தான் கதவை தட்டும், உடனே திறந்து விட வேண்டும். அர்ஜுன் ரெட்டி பட வாய்ப்பு முதலில் எனக்கு வந்தது. அதில் முத்த காட்சி மற்றும் நெருக்கமான காட்சிகள், அதிகம் இருந்ததால் நடிக்க மறுத்தேன். அந்த படத்தை நான் விட்டு இருக்கக்கூடாது. படம் பார்த்த பிறகு மிகவும் வருத்தம் அடைந்தேன். அது ஒரு அழகான படம். அந்த படத்தில் நடிக்க மறுத்தது நான் செய்த பெரிய தவறு. அதேபோல எனது வாழ்க்கையில் எனக்கு கிடைத்த ஒரு அற்புதமான வாய்ப்பை என்னால் மறக்க முடியாது. அது கமல்ஹாசனுடன் நடித்தது. இன்று நினைத்தால் கூட அதை என்னால் நம்ப முடியவில்லை. சினிமாவில் சகாப்தமாக விளங்கும் கமல்ஹாசனுடன் நடித்த அனுபவம் என்னை இன்றைக்கும் பூரிப்படைய செய்கிறது. ஒரே மாதிரியான கதாபாத்திரங்களை திரும்பத்திரும்ப செய்வது எனக்கு பிடிக்காது” என்றார்.
பார்வதி நாயர் அளித்த புகார்:
முன்னதாக, கடந்த அக்டோபர் மாதம் நுங்கம்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அந்தப்புகாரில் ‘ படப்பிடிப்பிற்காக வெளியூர் சென்றிருந்த போது, என் வீட்டில் இருந்த ரூ 6 லட்சம் மதிப்புள்ள வைரகற்கள், 3 லட்சம் மதிப்புமிக்க கைகடிகாரம், செல்போன், கேமரா, லேப்டாப் உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்கள் மாயமாகி இருந்தன. இந்த சம்பவத்தில் எனக்கு என்னுடைய வீட்டில் வேலை பார்த்து வந்த புதுக்கோட்டையைச் சேர்ந்த சுபாஷ் சந்திரபோஸ் (30) மீது சந்தேகம் இருக்கிறது என குறிப்பிட்டு இருந்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் விசாரணை நடத்தினர்.
இது ஒரு பக்கம் இருக்க, குற்றம் சாட்டப்பட்ட சுபாஷ், தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் பார்வதி நாயர் மீது புகார் ஒன்றை அளித்தார். அந்தப்புகாரில், பார்வதி தன்னை அடித்து துன்புறுத்தி, கொலை மிரட்டல் விடுப்பதாக கூறினார்.
இதனிடையே மீண்டும் சென்னை மாநகர காவல் ஆணையத்தில் புகார் அளித்த பார்வதி, இந்தப்புகார் குறித்து காலம் தாழ்த்தாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார். மேலும் செய்தியாளர்களை சந்தித்த அவர் சுபாஷ் ஒரு சைக்கோ. அவர் என்னை வெவ்வேறு விதமாக போட்டோக்களை எடுத்துள்ளார் என்று கண்ணீர் வடித்தார்.
இதனைத்தொடர்ந்து மீண்டும் பார்வதி நாயர் மீது புகார் அளித்த சுபாஷ், பார்வதி நாயர் மீது தான் வைத்திருக்கும் குற்றசாட்டுகளுக்கு உரிய ஆதாரம் இருப்பதாகவும் அதை எப்போது வேண்டுமானலும் காவல்துறையில் காண்பிக்க தயார் என்றும் கூறினார். மேலும் பார்வதி ஆண் நண்பர்களுடன் இரவு விருந்தை கொண்டாடிய போது சில விஷயங்களை நான் பார்த்துவிட்டேன். இதனால் என் மீது கோபம் கொண்ட பார்வதி இவ்வாறு என் மீது வீண் பழிசுமத்துகிறார் என்று குறிப்பிட்டு இருந்தார்.இந்த நிலையில் இந்த புகார்கள் குறித்தும் போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர்.
பார்வதி நாயர் சுபாஷ் மீது மேலும் ஒரு புகார் அளித்தார். அந்தப்புகாரில், சுபாஷ் சந்திர போஸ், என் பெயருக்கும், புகழுக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் யூடியூப் சேனல்களில் பொய்யான தகவல்களை பரப்பி வருவதாகவும், தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாகவும், ஆகையால் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தார். அந்தப்புகாரின் மீது சுபாஷ் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் அவரை கைது செய்தனர்.