விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே கிளியனூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ளது மொளசூர் கிராமம். இந்த கிராமத்தில் 5000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். மேலும் இந்த கிராமத்தில் 30 முதல் 15 வயது வரை உள்ள இளைஞர்களே அதிகம். இந்த நிலையில் இதே கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவில் தெருவில் வசிக்கும் ஏழுமலை என்பவர் கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்டு வருகிறார். இதன் காரணமாக இந்த கிராமத்தில் உள்ள இளைஞர்கள் அனைவரும் போதைக்கு அடிமையாகி உள்ளனர். இந்த கிராமத்தில் அரசாங்கம் சார்பில் நடத்தக்கூடிய டாஸ்மாக் எதுவும் இல்லை. அரசு மதுபான கடைக்கு செல்ல வேண்டுமென்றால் ஐந்து கிலோ மீட்டர் கடந்து திண்டிவனம் பகுதிக்கு தான் செல்ல வேண்டும்.
இந்த நிலையில் கிராமத்திலேயே கள்ளசந்தையில் சாராயம் கிடைப்பதனால் இளைஞர்களின் எதிர்காலம் பாதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மொளசூர் கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் கிராம பொதுமக்கள் ஆகியோர் ஒன்றிணைந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மாவட்ட ஆட்சியர் மற்றும் அருகில் உள்ள காவல் நிலையம் ஆகிய இடங்களில் பல்வேறு முறை மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை என குற்றம் சாட்டியுள்ளனர்.
இதன் காரணமாக நாளுக்கு நாள் கள்ள சாராய விற்பனை தொடர்ந்து அதிகரித்தே வந்தது. இதனை அடுத்து கிராம பொதுமக்கள் கள்ள சாராய விற்பனையில் ஈடுபட்ட ஏழுமலை மற்றும் அவரது மனைவி சத்தியா ஆகியோரை கையும் களவுமாக பிடித்துள்ளனர். இது சம்பந்தமாக ஏழுமலையிடம் பொதுமக்கள் விசாரித்த போது என்னை ஒன்றும் செய்ய முடியாது. 3 ஆயிரம் ரூபாய் காவலர்களுக்கு லஞ்சம் கொடுப்பதாகவும் தெரிவித்தார்.
இதை கேட்டு அதிர்ந்து போன கிராம மக்கள் அவரை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது சம்பந்தமாக ஊராட்சி மன்ற தலைவர் சீனுவாசனிடம் கேட்டபோது, மொளசூர் கிராமத்தில் நாளுக்கு நாள் சாராய விற்பனை அதிகரித்து வருவதாகவும், இதை தடுக்க பலமுறை மனு அளித்தும் அரசு அதிகாரிகள் லஞ்சம் பெற்றுக் கொண்டு கண்டும் காணாமல் உள்ளதாகவும், கிராமத்தில் உள்ள இளைஞர்களின் எதிர்காலம் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளதாக வருத்தம் தெரிவித்தார். கள்ளசாராயம் மற்றும் குற்ற சம்பவத்திற்கும் காவல் துறையினரே லஞ்சம் பெற்றுக் கொண்டு, இது போன்று செயலில் ஈடுபடுவதால் கிராம மக்கள் குற்றவாளியை பிடித்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.