தங்கலான்


பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள தங்கலான் படம் வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. விக்ரம் , மாளவிகா மோகனன் , பார்வதி திருவொத்து , பசுபதி உள்ளிட்டவர்கள் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஸ்டுடியோ கிரீன் இப்படத்தை தயாரித்துள்ளது. ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.


ஜி.வி பிரகாஷ் குறித்து ரஞ்சித்


ரஞ்சித் இயக்கிய முந்தைய படங்களுக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். தங்கலான் படத்தில் முதல் முறையாக ஜி.வி.பிரகாஷூடன் இணைந்துள்ளார். ஜி.வி பிரகாஷூடன் இணைந்து வேலை செய்தது குறித்து இயக்குநர் ரஞ்சித் தன் அனுபவங்களை பகிர்ந்துகொண்டார். 


" சில நேரங்களில் எனக்கு எந்த விதமான இசை தேவைப்படுகிறது என்பதை நான் ஒரு வார்த்தையில் தான் சொல்வேன். ஆனால் அதற்கு பின் ஒரு பெரிய எமோஷன் இருக்கும். சந்தோஷ் நாராயணன் என்னை முழுமையாக புரிந்துகொண்டவர். நான் ஒரு வார்த்தை சொன்னால் அந்த எமோஷனை அவர் உடனே புரிந்துகொள்வார். சில நேரங்களில் முழு பாட்டையும் போட்டு கொண்டுவரும்போது எனக்கு பிடிக்கவில்லை என்றால் "சரி மாமே" என்று அதை தூக்கி போட்டுவிடுவார். ஜிவி பிரகாஷூடன் இப்படத்திற்கு வேலை செய்தபோது எனக்கு நிறைய கேள்விகள் இருந்தன. நாம் சொல்வதை அவரால் புரிந்துகொள்ள முடியுமா என்று. ஆனால் அவர் ஜி.வி நான் எனக்கு இப்படியான ஒரு பாட்டு தான் வேண்டும் ஒரு சில இசைக்கருவி எல்லாம் பயன்படுத்தக் கூடாது என்று அவரிடம் சொன்னால் அதை அவர் புரிந்துகொண்டார். இந்த படத்தில் அவருடன் வேலை செய்தது எனக்கு ஒரு நல்ல அனுபவம்.


பா ரஞ்சித் பற்றி ஜிவி பிரகாஷ்


இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் கூறுகையில் " ஒவ்வொரு கதைக்கும் ஒரு குரல் இருக்கிறது. தங்கலான் படம் என்பது பழங்குடி மக்களின் குரல். அந்த குரலை இந்தப் படத்தில் கொண்டுவர வேண்டும் என்று நான் நினைத்தேன். இப்படத்திற்காக நிறைய பழங்குடி மக்களின் இசையை ஆராய்ச்சி செய்தோம். ஆப்பிரிக்க பழங்குடி மக்கள் இசை இருக்கிறது ஆனால் அதை இந்த படத்திற்காக பயன்படுத்த முடியாது. உலகத்தரம் வாய்ந்த இசையையும்  அதே நேரத்தில் பழங்குடி மக்களின் இசையையும் சேர்த்து இந்த படத்திற்காக உருவாக்கி இருக்கிறோம்" என்று ஜி.வி தெரிவித்தார்.