சினிமாத் துறையில் தனக்கு நிறைய எதிரிகள் உள்ளதாக நடிகை நித்யா மேனன் தெரிவித்துள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


சிறுவயதில் இருந்தே நடிப்பில் ஆர்வம் கொண்டிருந்த நிலையில் கன்னடத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி மலையாளத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை நித்யா மேனன். இவர் சித்தார்த் நடித்த 180 படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார். தொடர்ந்து வெப்பம், மாலினி 22 பாளையங்கோட்டை, ஜேகே என்னும் நண்பனின் வாழ்க்கை ஆகிய படங்களில் நடித்த அவருக்கு மணி ரத்னம் இயக்கிய ஓ காதல் கண்மணி படம் திருப்புமுனையாக அமைந்தது. 






இதனையடுத்து காஞ்சனா 2, 24, மெர்சல், சைக்கோ உள்ளிட்ட பல படங்களில் நடித்த நித்யாவுக்கு சமீபத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் படம் நல்ல பெயரை பெற்றுக் கொடுத்துள்ளது. இந்த படத்தில் படம் முழுவதும் வரும் நித்யா மேனனின் நடிப்பு பலரையும் கவர்ந்தது. தமிழ், தெலுங்கு,மலையாளம் ஆகிய படங்களில் நடித்து வரும் அவரைப் பற்றி கடந்த சில நாட்களாக வதந்திகள் பரவி வருகிறது. 


சமீபத்தில் நித்யா ஒரு நடிகரை திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்ற செய்தி வெளியானது. இதனை மறுத்த அவர், அப்படி ஒரு எண்ணமே, திட்டமும் இப்போதைக்கு இல்லை என விளக்கமளித்தார். இதேபோல் மலையாளத்தில் தக்‌ஷினம் ஒரு பெண்குட்டி படத்தில் நடித்து வரும் நித்யா, தயாரிப்பாளர் ஒருவரை சந்திக்க மறுத்ததாக  தகவல்கள் வெளியானது. இதனைத் தொடர்ந்து அவர் திமிர் பிடித்தவர் என்றும், அதனால் மலையாள படங்களில் நடிக்க தடை விதிக்க வேண்டும் என கூறி சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர் தெரிவித்தார். 






ஆனால்  நான் மிகவும் திமிர்பிடித்தவன் என்று நினைக்கிறார்கள். என்னுடன் வேலை பார்ப்பவர்கள் அப்படி உணர்வதாக எனக்கு தெரியவில்லை என நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். மேலும்  சினிமா துறையில் எனக்கு நிறைய எதிரிகள் உள்ளனர். அவர்கள் எனக்கு எதிராக பொய்களைப் பரப்புகிறார்கள். நான் எப்படிப்பட்டவர் என்பது அனைவருக்கும் தெரியும் என நித்யா மேனன் தெரிவித்துள்ளார்.