வெற்றி மாறன் இயக்கத்தில் உருவாகும் விடுதலை படத்தில் பிரபல ஒளிப்பதிவாளர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தனுஷ் நடித்த ‘அசுரன்’ படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் வெற்றிமாறன் அடுத்ததாக சூரியை, விஜய் சேதுபதியை வைத்து “விடுதலை” என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்தப்படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைக்கும் நிலையில் முதல் முறையாக வெற்றிமாறன் - இளையராஜா கூட்டணி இணைந்துள்ளதால் படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
சத்தியமங்கலத்தின் அடர்ந்த காட்டுப்பகுதிகளில் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நடந்த நிலையில் 4வது கட்ட படப்பிடிப்பு திண்டுக்கலில் உள்ள சிறுமலையில் நடைபெற்றது. படத்திற்காக சூரி செய்யும் கடுமையான வொர்க் அவுட் வீடியோக்கள் வெளியாகி வைரலானது. இப்படத்தின் படப்பிடிப்புத் தளங்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை முன்னதாக விஜய் சேதுபதியும், சூரியும் தன் சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்திருந்தனர்.
இப்படத்தில் நடிகர் சூரி போலீஸ் வேடத்தில் நடிக்க,விஜய் சேதுபது போராளியாக நடித்து வருகிறார். இந்நிலையில் விடுதலைப் படம் குறித்து முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது இப்படத்தில் பிரபல ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான ராஜீவ் மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. ராஜீவ்வுக்கு வெற்றி மாறன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தை எழுதியுள்ளதாகவும், அந்த கேரக்டருக்கு அவர் தான் பொருத்தமானவர் என முடிவு செய்தே அணுகியதாகவும் சொல்லப்படுகிறது.
அதேசமயம் விடுதலை படத்தில் ராஜீவ் நடிக்க உடனே ஒப்புக் கொண்டதாகவும், விரைவில் அவர் படப்பிடிப்பில் கலந்துக் கொள்வார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுவே ராஜீவ் மேனன் தமிழில் நடிக்கும் முதல் படமாகும். ஒளிப்பதிவாளராக இருந்த அவர் மின்சார கனவு, கண்டுக்கொண்டேன் கண்டுக்கொண்டேன், சர்வ தாள மயம் ஆகிய படங்களையும் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கடைசியாக புத்தம் புது காலை என்னும் ஆந்தாலஜி படத்தில் 'ரீ யூனியன்' என்ற பகுதியை இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.