நஸ்ரியா நஸிம்
அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளியான ‘நேரம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் நஸ்ரியா நஸிம். மிக அழகான பாவனைகள், இப்போது தான் தூக்கத்தில் இருந்து விளித்த குழந்தையின் பச்சிளம் கண்கள். சிறிய மேலிதழ்களின் குறையை மறைக்க கீழ் இதழ்கள் சற்று எடுப்பாக காட்டும் அழகை ஒவ்வொரு இளைஞரும் ரகசியமாக ரசிக்கத் தொடங்கினார்கள்.
இதுதான் காரணம் என்று குறிப்பிட்டு சொல்ல முடியாத ஒரு வசீகரம் அவரது பையோ டேட்டாவை இளைஞர்களை கூகிள் செய்ய வைத்தது. புரியாத மலையாளப் படங்களைப் பார்க்க வைத்தது. புது செல்ஃபோன் வாங்கியதும் அதில் வால்பேப்பராக அவரது புகைப்படத்தை வைக்கத் தூண்டியது. ஒரு நடிகைக்கு காதல் கடிதம் எழுதி நீண்ட நாட்கள் ஆகியிருந்தன. நஸ்ரியா அதை மீண்டும் தொடங்கி வைத்தார். யார் எழுதினாரோ இல்லையோ நான் எழுதினேன்.
குழந்தை நட்சத்திரம்
தனது சிறிய வயதில் இருந்தே பாட்டு நிகழ்ச்சிகளில் க்யூட்டாக தலை ஆட்டிக் கொண்டு பாடுவது. தன்னம்பிக்கையோடு பேசுவது என தொலைக்காட்சிகளில் வருகை தருவதற்கு பழகிவிட்டிருந்தார் நஸ்ரியா. அதன் காரணத்திலோ என்னவோ நடிப்பு அவருக்கு காற்றில் ஆடும் கூந்தல் போல் எளிமையாக வந்தது.
இன்னும் சிலர் மட்டும் அவரது ரசிகராக மாறாமல் மிச்சம் இருந்தார்கள் அவர்களை வாரி சுருட்டி தனது லேடிபர்ட் சைக்கிள் கூடையில் போடுவது மாதிரி ராஜா ராணி படத்தில் அசத்தினார். ப்ரதர், ப்ரதர்.. என்று ஆர்யாவைக் கூப்பிடும் போதெல்லாம், ஏனோ இங்கு அத்தனை ஆண்களுக்கு கொஞ்சம் வலிக்கதான் செய்தது. மறுபக்கம் மலையாளத்தில் ஷலாலா மொபைல்ஸ், ஓம் ஷாந்தி ஓஷானா, பெங்களூர் டேஸ் என அடுத்தடுத்த ஹிட் படங்கள் கொடுத்து அசத்தினார்.
வெகு குறுகிய காலத்திலேயே பிரபலமான நஸ்ரியா, தனுஷ் நடித்த நையாண்டி படத்தில் நடித்தார். இந்தப் படம் போதுமான வெற்றிபெறவில்லை. வெற்றி பெற்றிருந்தாலும் அவர் திருமணம் செய்து கொள்வதில் இருந்து அவரது முடிவை யாராலும் மாத்தியிருக்க முடியாது. நல்ல அடைமழை திடீரென்று வந்து குடையை விரிப்பதற்குள் நின்றுவிட்டதைப் போல் ஒரு அமைதி ரசிகர்களின் மனதில் கவிந்தது. யாருக்கு இருந்ததோ இல்லையோ எனக்கு இருந்தது.
தமிழ் சினிமாவில் அடுத்தடுத்த க்ரஷ்கள் வந்து சென்றுகொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் நஸ்ரியா ஒருவர் இருந்திருந்தால் ஒரு பத்து ஆண்டுகளுக்கு தமிழில் அசைக்க முடியாத ஒரு இடத்தை கொடுத்த தமிழ் ரசிகர்கள் தயாராக இருந்தார்கள்.
இன்னுமும் ஒன்னும் காலம் கெட்டுவிடவில்லை. சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்க, அதில் ரீஎன்ட்ரி கொடுக்கிறார் நஸ்ரியா. ரசிகர்களே உங்கள் மனதில் தூசுப்படிந்து கிடக்கும் அந்தக் கோயிலை கொஞ்சம் சுத்தம் செய்து வையுங்கள். மீண்டும் தரிசனம் தர வருகிறார் நஸ்ரியா. உங்கள் கோயிலில் இடம் இருக்கிறதோ இல்லையோ, என் கோயில் எப்போதும் காலியாக தான் இருக்கிறது!