தன்னுடைய வாழ்க்கையில் நடிகர் விஜய் பங்கு எந்தளவு முக்கியமானது என்பதை நடிகர் தாமு பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
நடிகர், மிமிக்ரி கலைஞர் தாமு:
வானமே எல்லை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் நடிகர் தாமு. ரஜினி, விஜய், அஜித், பிரசாந்த்,சரத்குமார், பிரபுதேவா, சத்யராஜ் உள்ளிட்ட அன்றைய காலக்கட்டத்தின் அத்தனை முன்னணி நடிகர்களின் படங்களிலும் காமெடி மற்றும் குணச்சித்திர வேடத்தில் நடித்து பிரபலமானார். கிட்டதட்ட 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த தாமு மிமிக்ரி கலைஞராகவும் வலம் வந்தார்.
ஒரு கட்டத்தில் சினிமாவில் இருந்து விலகிய தாமு, ஏழு ஆண்டுகளாக மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஏ. பி. ஜே. அப்துல் கலாமிடம் உதவியாளராக பணியாற்றினார். தற்போது கல்வித்துறையில் மிகச்சிறந்த பங்களிப்பை அளித்து வருகிறார்.
ஆனால் பள்ளி மாணவர்களிடையே இவர் பேசியது மிகப்பெரிய அளவில் வைரலானது. அதேசமயம் பள்ளி மாணவர்களின் அவரின் பேச்சை கேட்டு மன அழுத்தத்துக்கு ஆளாவதாக குற்றச்சாட்டும் எழுந்தது. தாமு பேசும் போது மாணவ, மாணவிகள் பேசிய வீடியோ இணையத்தில் வைரலானது. இப்படியான நிலையில் தாமு நடிகர் விஜய் பற்றி பேசிய பழைய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது.
தாமு நெகிழ்ச்சி பேச்சு:
விஜய் மற்றும் தாமு இணைந்து நாளைய தீர்ப்பு, லவ் டுடே, காதலுக்கு மரியாதை, என்றென்றும் காதல், கண்ணுக்குள் நிலவு, துள்ளாத மனமும் துள்ளும், பத்ரி, கில்லி,போக்கிரி, வில்லு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளனர். இப்படியான நிலையில் தாமு பேசிய அந்த வீடியோவில், “சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனிவா நகரில் 40 நாடுகளை கலந்து கொண்ட மிமிக்ரி போட்டி நடைபெற்றது. அதில் ஜூராசிக் பார்க் டைனோசர் மாதிரி மிமிக்ரி செய்து முதல் பரிசு பெற்றேன். அந்த ஜூராசிக் படத்தை வாயிலேயே மிமிக்ரி செய்து ஜெயிச்சிட்டு வந்தேன். அதற்கு என்னை தயார் படுத்தியது என்னுடைய நண்பன் தான். ஜூராசிக் படத்துல டைனோசர் சவுண்டை மட்டும் தனியாக எடிட் பண்ணி, இதை பாரு வித்தியாசமா இருக்குல.
இதை காதில் போட்டுக்கொண்டு திரும்ப திரும்ப கேட்க வைக்கிறான். இது சரியா வருமா என நான் கேட்க, அதே மாதிரி வரும் என சொல்கிறான். நானும் அவன் சொன்ன மாதிரி ஜெனிவா போட்டியில் கலந்து கொண்டு ஜெயிச்சிட்டேன். இன்னைக்கு நானும் ஜெயிச்சிட்டேன், அவனும் வேற லெவலுக்கு போயிட்டான். அவன் தான் என் நண்பன் இளைய தளபதி விஜய்” என தெரிவித்துள்ளார்.