தென்னிந்திய திரையுலகில் நம்பர் நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று தென்னிந்தியாவில் இதுவரை 50க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக, தமிழில் இவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. நயன்தாரா தற்போது சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார்.


நடிகை நயன்தாராவும், திரைப்பட இயக்குனர் விக்னேஷ் சிவனும் கடந்த சில வருடங்களாக காதலித்து வருகின்றனர். இந்த நிலையில், இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டதாகவும், நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாகவும் அடிக்கடி செய்திகள் வெளியாகி வந்தது.




இந்த நிலையில், ஆகஸ்டு 15-ந் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு, விஜய் தொலைக்காட்சி நடிகை நயன்தாராவுடன் ஒரு சிறப்பு நேர்காணலை ஏற்பாடு செய்துள்ளது. இந்த நிகழ்ச்சிக்கான ப்ரோமா இன்று விஜய் தொலைக்காட்சியில் வெளியிடப்பட்டது.


இந்த நிகழ்ச்சியில் நடிகை நயன்தாரா தனது திருமணம் பற்றி வெளிப்படையாக கருத்து தெரிவித்துள்ளார். 45 நொடிகள் மட்டுமே அந்த ப்ரோமாவில் நிகழ்ச்சித் தொகுப்பாளர் டி.டி. நயன்தாராவிடம் கையில் அணிந்துள்ள மோதிரம் பற்றி கேட்டுள்ளார்.


அதற்கு பதிலளித்த நயன்தாரா, அந்த மோதிரம் நிச்சயதார்த்த மோதிரம் என்று கூறினார். மேலும், விக்னேஷ் சிவனிடம் பிடித்தது என்ன? பிடிக்காதது என்ன? என்று தொகுப்பாளர் டி.டி. கேட்டதற்கு விக்னேஷ் சிவனிடம் எல்லாமே பிடிக்கும் என்று புன்னகையுடன் பதிலளிப்பார். மேலும், இந்த நிகழ்ச்சியில் தனது வாழ்வில் நடைபெற்ற பல்வேறு சுவாரஸ்யமான விஷயங்கள் குறித்தும் நயன்தாரா பகிர்ந்து கொண்டுள்ளார்.




விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி நாயகனாகவும், நயன்தாரா நாயகியாகவும் நடித்த நானும் ரெளடிதான் படம் கடந்த 2015ம் ஆண்டு வெளியானது. இந்த படத்தின்போது நடிகை நயன்தாராவிற்கும், விக்னேஷ் சிவனுக்கும் இடையே நெருக்கமான நட்பு ஏற்பட்டது. இந்த நட்பு நாளடைவில் காதலாக மாறியது.


விக்னேஷ் சிவனுக்கும், நயன்தாராவிற்கும் எப்போது திருமணம் என்று எதிர்பார்த்திருந்த அவர்களது ரசிகர்களுக்கு இன்ப செய்தியாக நயன்தாராவிற்கு நிச்சயதார்த்தம் நடைபெற்ற தகவல் கிடைத்துள்ளது. இதனால், விரைவில் நயன்தாராவிற்கு திருமணம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.