ராமராஜனை பிரிந்த நேரத்தில் தற்கொலை செய்துக் கொள்ள நினைத்ததாக நடிகை நளினி பேசிய பழைய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. 


தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருந்தேபோதே நடிகர் ராமராஜன் - நடிகை நளினி இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதியினருக்கு அருணா, அருண் என்ற இரு குழந்தைகள் உள்ளனர். மறைந்த முதலமைச்சர் எம்ஜிஆர் இவர்களது திருமணத்தை நடத்தி வைத்திருந்தார். இதனிடையே இந்த தம்பதியினர் 2000 ஆம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர். 


ஒரு நிகழ்ச்சியில் பேசிய நளினி, “குழந்தை பிறந்த பின் வளர வளர அப்பாவின் வாழ்க்கையின் நிலைமை சரிவை நோக்கி தொடங்கும் என ஜோதிடர்கள் சொன்னார்கள். ராமராஜனும் ஜோதிடத்தில் நம்பிக்கையுள்ளவர். ஜோதிடர் சொன்ன பரிகாரங்களை எல்லாம் செய்தோம். ஆனால் தலையெழுத்தில் என்ன எழுதியிருக்குமோ அதுதான் நடந்தது. ஒரு கட்டத்தில் நான் தனியாக இருந்தால் எல்லோரும் நல்லா இருப்போம். இல்லையென்றால் பையனை யாரிடமாவது வளர்க்க கொடுத்து விடுவோம் என சொன்னார்.


நான் நீங்க தனியா இருங்க என சொல்லி, என்னுடைய இரு குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு வந்துவிட்டேன். இன்னைக்கு நாங்க நன்றாகவே இருக்கிறோம் அதன்பிறகே நாங்கள் பிரிந்தோம் என தெரிவித்திருந்தார். இந்நிலையில் நளினி வீடியோ ஒன்றில், விவாகரத்து ஆன நிலையில் தான் தற்கொலை செய்ய நினைத்ததாக தெரிவித்துள்ளார்.


அந்த நேர்காணலில், “என் வாழ்க்கையில் நடந்த மிகப்பெரிய சோகம் என்னவென்றால், ‘நான் ரொம்ப சந்தோசப்பட்டு பண்ணிய கல்யாணம். நான் வாழ்ந்த ஒரு ஒரு நிமிஷமும் எனக்கு எவ்வளவு கெட்டது நடந்தாலும் நல்லது மட்டுமே எடுத்துகிட்டு 14 வருஷம் வாழ்ந்தேன். அந்த 14 வருஷத்துக்கு பிறகு  மார்ச் 8 ஆம் தேதி தான் விவாகரத்து கிடைத்தது. அந்த ஒரு தினம் என் வாழ்க்கையில் எந்த பெண்ணுக்கும் வரக்கூடாது என நினைச்சேன். ஏனென்றால் வாழ்க்கையில் எந்த ஒரு கஷ்டம் ஆனாலும் நிச்சயம் நான் ஒருத்தருடன் தான் வாழணும், வாழ்ந்து காட்டணும்ன்னு ஒரு முடிவுல இருந்தேன்.


நான் மதுரைக்கார பொண்ணு இல்லையா, அந்த முடிவுல இருந்து நான் என்னைக்குமே மாற மாட்டேன். ராமராஜன் இல்லைன்னா, இன்னொருத்தரு கூட வாழணும்ன்னு என்னால நிச்சயமா நினைச்சி கூட பார்த்திருக்க முடியாது. அவர் இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து என்ன பிரயோஜனம் என நினைச்சி தற்கொலை பண்ண நினைச்சேன். ஆனால் இன்னைக்கு அவர் முன்னாடி தலை நிமிர்ந்து நடக்குறன்னா அதுவும் இந்த மதுரக்கார பொண்ணால முடியும்ன்னு தான்” என தெரிவித்திருந்தார்.