டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவு பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து வெண்கலப் பதக்கம் வென்று  அசத்தியிருந்தார். ரியோ ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கமும் டோக்கியோவில் வெண்கலப் பதக்கமும் வென்று தொடர்ச்சியாக இரண்டு ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை படைத்தார். இதனால் அவர் நாடு திரும்பியது முதல் பல்வேறு தலைவர்கள், பிரபலங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். 


அந்தவகையில்  பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் வீராங்கனை பி.வி.சிந்துவிற்கு ஒரு நட்சத்திர ஓட்டலில் விருந்து அளித்துள்ளார். அதில் சிந்து மற்றும் தீபிகாவின் கணவர் ரன்வீர் சிங் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிலையில் தற்போது மற்றொரு திரை நட்சத்திரமான நடிகை நதியா பி.வி.சிந்துவுடன் ஒரு இடத்தில் சந்தித்துள்ளார். அவரை சந்தித்து போட்டோ எடுத்து கொண்டு அதை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பதிவில் போட்டுள்ளார். அதற்கு உருக்கமாக ஒரு சில வரிகளையும் எழுதியுள்ளார். 


 






அந்தப் பதிவில், "இது ஒரு மிகப்பெரிய ரசிகையின் தருணம். நான் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற பி.வி.சிந்துவை இன்று சந்தித்தேன். அவர் களத்தில் எந்தவித பயமும் காட்டாமல் விளையாடும் ஆற்றலை கொண்ட பேட்மிண்டன் வீராங்கனை. ஆனால் களத்திற்கு வெளியே எப்போதும் புன்னகையுடன் இருக்கும் ஒரு நல்ல மனிதர்" என உருக்கமாக பதிவிட்டுள்ளார். நதியாவின் இந்தப் பதவை பலரும் லைக் செய்து இந்த படத்தை பகிர்ந்து வருகின்றனர். 


முன்னதாக கடந்த 12ஆம் தேதி பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் வீராங்கனை பி.வி.சிந்துவிற்கு ஒரு நட்சத்திர ஓட்டலில் விருந்து அளித்துள்ளார். அதன்பின்னர் ஒரு செய்தி தகவல் மிகவும் வைரலானது. அதாவது பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்துவின் வாழ்க்கை வரலாறு தொடர்பான பயோபிக் திரைப்படம் விரைவில் தயாராக உள்ளதாக தெரிகிறது. அந்தப் படத்தை தீபிகா படுகோன் மற்றும் சிந்து ஆகியோர் சேர்ந்து தயாரிக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது. மேலும் இந்தப் படத்திற்கு சரியான இயக்குநர் கிடைத்தவுடன் இப்படம் தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது. அது வரை இந்தப் படம் தொடர்பான எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகது என்று பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 



ஏற்கெனவே கடந்த 2019ஆம் ஆண்டு பி.வி.சிந்துவின் வாழ்க்கை வரலாறு படமாக்கப்பட்டால் யார் அதில் நடிக்க வேண்டும் என்ற கேள்வி சிந்துவிடம் எழுப்பட்டது. அதற்கு பி.வி.சிந்து, "என்னுடயை பயோபிக் படம் வந்தால் அதில் நிச்சயம் தீபிகா படுகோன் தான் நடிக்க வேண்டும். ஏனென்றால் அவர் ஒரு பேட்மிண்டன் வீராங்கனை என்பதால் அவருக்கு அது நன்றாக பொருந்தும்" எனக் கூறியிருந்தார். இந்தச் சூழலில் அவர்கள் இருவரும் இணைந்து பயோபிக் படத்தை தயாரிக்க உள்ளதாக ஒரு தகவல் வெளியாகி பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க: ஐபிஎல்: மும்பையை சம்பவம் செய்த சிஎஸ்கேவின் டாப் 5 வெற்றிகள்!