நடிகை மீரா மிதுன். சர்ச்சைகளின் நாயகி. பிரபலங்களை ஏதாவது விமர்சித்து அதனால் விமர்சிக்கப்பட்டு தன்னை லைம் லைட்டில் வைத்துக் கொள்வார். விஜய், சூர்யா என விமர்சிக்காத பிரபலங்கள் இல்லை. வாயைத் திறந்தால் விஷம் தான் கொட்டும் என்பதுபோல் பேசி பிரச்சனையை ஏற்படுத்துபவர். இவரை வைத்து இயக்குநர் அன்பரசன் பேயக் காணோம் என்ற படத்தை இயக்கினார்.


குளோபல் எண்டர் டெயின்மெண்ட் பட நிறுவனம் சார்பில், தேனி பாரத் ஆர்.சுருளிவேல் இப்படத்தை தயாரித்துள்ளார். இந்த படத்தில் மீரா மிதுன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இவரை தவிர கௌசிக், சந்தியா ராமச்சந்திரன், கோதண்டம், ஜாக்குவார் தங்கம், ஜெயா டிவி ஜேக்கப், வி.கே.சுந்தர்,  செல்வகுமார், ஜெய் சங்கர், துரை ஆனந்த்,ரவி, விக்கி, ஆகியோர் நடித்துள்ளனர். சிறப்புத் தோற்றத்தில் இயக்குனர் தருண்கோபி  நடித்துள்ளார்.  இப்படத்திற்கு மிஸ்டர் கோளாறு என்பவர் இசையமைக்க, காதர் மஸ்தான் பின்னணி இசைப்பணிகளை கவனித்துள்ளார். ராஜ்.O.S, கௌபாஸு, பிரகாஷ் ஆகியோர் ஒளிப்பதிவு செய்துள்ளனர். ஒரு பேய் இன்னொரு பேயைத் தேடுவது தான் படத்தின் கதை எனக் கூறப்படுகிறது. படம் முழு நீள காமெடி படம் எனவும் கூறுகின்றனர்.


மாலை மாற்றினாரா?



இந்நிலையில் இவர் இயக்குநர் அன்பரசனுடன் மாலை மாற்றிக் கொண்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதை உறுதி செய்யும் விதமாக கோவில் பின்னணியில் இவர்கள் இருவரும் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படமும் இணையத்தில் வைரலாகி வருகிறது. இது உண்மையா என்னவென்பதை மீராவே அவர் ஸ்டைலில் விளக்கினால் தான் உண்டு. இல்லை வழக்கமான பப்ளிசிட்டி மசாலாவா என்பதும் விரைவில் தெரிந்துவிடும். ஆனால் படப்பிடிப்பு முடிய 2 நாட்கள் மட்டுமே இருந்த நிலையில் மீரா மிதுன் படப்பிடிப்பு தளத்தில் இருந்து ஜூட் விட்டுச் சென்றார். பேயக் காணோம் படக்குழு ஹீரோயினக் காணோம்னு தேடுச்சு. அத்தனை கசப்பான அனுபவத்திற்குப் பின்னரும் மீராவை அன்பரசன் கரம் பிடிப்பாரா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.




வழக்கும் ஜாமீனும்



பட்டியலின மக்களுக்கு எதிராக அவதூறாக பேசியதாக நடிகை மீரா மிதுன் மீது வழக்கு தொடரப்பட்டது. சென்னை மத்தியக் குற்றப்பிரிவு சைபர் பிரிவு போலீஸார் மீரா மிதுன் மீது IPC சட்டப்பிரிவுகள் 153 ( இரு பிரிவுகள் இடையே கலவரத்தைத் தூண்டுதல்) 153(எ)1 (பேட்டி, பேச்சு, எழுத்து மூலம் இரு சமூகங்கள் இடையே மோதலைத் தூண்டுதல்) 505(1) (பி) (குறிப்பிட்ட சமூகத்திற்கு, அரசுக்கு எதிராக குற்றம் செய்ய தூண்டுவது) 505(2) (மக்களின் நம்பிக்கை, வழிபாட்டுக்கு எதிராகப் பேசுவது, நடப்பது),வன்கொடுமை தடுப்புச் சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இதைத்தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் 14-ஆம் தேதி கேரளாவில் அவரை காவல்துறையினர் கைது செய்தனர்.  இந்தச் சம்பவம் தொடர்பாக அவரது நண்பர் சாம் அபிஷேக்கும் கைது செய்யப்பட்டார்.இதனைத் தொடர்ந்து, இருவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர் இருவரும் ஜாமீனில் வெளிவந்தனர்.


அப்படி என்னதான் பேசினார் மீரா?



"பொதுவாக நான் பட்டியலின மக்கள் பற்றி பேசுவது இல்லை. ஏன் அவர்களைப் பற்றி தவறாகப் பேசுகிற மாதிரி வருகிறது என்றால், எல்லா பட்டியலின மக்களும் தப்பான, மோசமான குற்றச்செயல்களில் ஈடுபடுகிறார்கள். அதனால்தான் அவர்களுக்கு நிறைய பிரச்னைகள் வருகிறது. திரையுலகில் இருக்கும் பட்டியலின இயக்குனர்கள், பட்டியலினமக்கள்தான் எல்லா வேலையும் செய்கிறார்கள், ஏமாற்றுகிறார்கள். அவர்களுக்கு, பட்டியலின இயக்குனர்களுக்கு மற்றவர்கள் ஏன் உதவி செய்கிறார்கள் என்று தெரியவில்லை" இது தான் மீராவின் பேச்சு. அவர் இதை நான் பேசவில்லை என்றெல்லாம் மழுப்ப முடியாது. ஏனெனில் அவர் பேசிய வீடியோ இணையத்தில் காட்டுத் தீ போல் பரவியது.