உலக உடலுறுப்பு தானம் தினத்தையொட்டி நடிகை மீனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார். அதில், உடலுறுப்பு தானத்தின் அவசியம் பற்றியும், உடலுறப்பு தானத்தின் முக்கியத்துவம் பற்றியும், அதனால் தான் சந்தித்த அனுபவங்கள் பற்றியும் தெளிவாக கூறியுள்ளார் மீனா.
‛‛உயிரைக் காப்பாற்றுவதை விட பெரிய நன்மை எதுவும் இல்லை. உறுப்பு தானம் என்பது உயிரைக் காப்பாற்றும் உன்னதமான வழிகளில் ஒன்றாகும். இது ஒரு வரம், நாட்பட்ட நோயுடன் போராடும் பலருக்கு இது இரண்டாவது வாய்ப்பு, நான் தனிப்பட்ட முறையில் அதை சந்தித்தேன். ஒரு நன்கொடையாளர் எனது மறைந்த கணவர் சாகருக்கு கிடைத்திருந்தால், எனது வாழ்க்கை மாற்றியமைக்கக்கூடிய ஆசிர்வதிப்பவராக அவர் இருந்திருப்பார். ஒரு நன்கொடையாளர் 8 உயிர்களைக் காப்பாற்ற முடியும். உடல் உறுப்பு தானத்தின் முக்கியத்துவத்தை அனைவரும் புரிந்து கொள்வார்கள் என்று நம்புகிறேன். இது நன்கொடையாளர்கள் மற்றும் பெறுநர்கள் மற்றும் மருத்துவர்களுக்கு இடையில் மட்டுமல்ல. இது குடும்பம், நண்பர்கள், சக ஊழியர்கள் மற்றும் அறிமுகமானவர்களை பெரிதும் பாதிக்கிறது. இன்று எனது உடல் உறுப்புகளை தானம் செய்வதாக உறுதிமொழி எடுத்துக்கொண்டேன். உங்கள் பாரம்பரியத்தை வாழ வைப்பதற்கான சிறந்த வழி. அன்புடன் மீனா சாகர்.,’’
இவ்வாறு அந்த பதிவில் தெரிவித்துள்ளார் மீனா.
கடந்த ஜனவரி மாதம் நுரையீரல் தொற்றால் அனுமதிக்கப்பட்டு, இரு நுரையீரலும் செயலிழந்த நிலையில், உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் கடந்த மாதம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால், நடிகை மீனா மற்றும் அவரது மகள் நைனிகா பெரும் சோகத்திற்கு ஆளாகினர்.
அவர்களை மட்டுமின்றி, இந்திய திரையுலகமே இந்த சோகத்தை அவருடன் பகிர்ந்து கொண்டது. இதற்கிடையில், இச்சம்பவத்திற்கு பிறகு வீட்டிலேயே இருந்த மீனா, நீண்ட நாட்களுக்குப் பின் தன் தோழிகளான கலா மாஸ்டர், நடிகை ரம்பா உள்ளிட்டோருடன் கடற்கரை சென்று மகிழ்ந்து வந்தார்.
இந்த நிலையில் தான், உலக உடலுறுப்பு தானம் தினத்தை முன்னிட்டு, அதன் அவசியம் குறித்து பதிவிட்டுள்ளார். சரியான நேரத்தில் அவரது கணவருக்கு நுரையீரல் கிடைக்காமல் போனதால், அதன் முக்கியத்துவத்தை உணர்ந்திருந்தார் மீனா. அதனால் தான், தனது உடலையும் தானம் செய்துள்ள அவர், பிறரையும் தானம் செய்ய வலியுறுத்தி இந்த பதிவை வெளியிட்டுள்ளார்.