நடிகை மீனா சர்வதேச உடல் உறுப்பு தான  தினத்தை முன்னிட்டு தனது உடல் உறுப்புகளை தானம் செய்வதாக அறிவித்துள்ளார். 


சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின் நடிகையாக தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் பல முன்னணி நடிகர்களுக்கும் ஜோடியாக நடித்து முன்னணி நடிகையாக திகழ்ந்த மீனா கடந்த 2009 ஆம் ஆண்டு ஜூலை 12 ஆம் தேதி பெங்களூரைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளரான வித்யாசாகரை திருமணம் செய்துக் கொண்டார். இந்த தம்பதியினருக்கு நைனிகா என்ற மகள் உள்ளார். 






இதனிடையே கணவர் வித்யாசாகருக்கு ஏற்கனவே இருந்த நுரையீரல் பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பெற்று வந்தார்.  இந்நிலையில் சிகிச்சைப் பலனளிக்காமல் மீனாவின் கணவர் வித்யாசாகர் கடந்த ஜூன் 28 ஆம் தேதி உயிரிழந்தார். அவரின் மறைவு திரையுலகினர், ரசிகர்கள் இடையே மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பலரும் தங்கள் இரங்கல்களை சமூக வலைத்தளம் வாயிலாக மீனாவுக்கு தெரிவித்தனர்.  மேலும் நடிகர்கள் ரஜினி,பிரபுதேவா, நடிகைகள் லட்சுமி, குஷ்பு,சினேகா, ரம்பா, கலா மாஸ்டர் என பல பிரபலங்களும் மீனா வீட்டுக்கு நேரில் சென்று கணவர் வித்யாசாகர் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.  


இதனைத் தொடர்ந்து அன்புக் கணவர் வித்யா சாகரின் இழப்பால் நான் மிகவும் வருந்துகிறேன்.  அனைத்து ஊடகங்களும் எங்களின் தனியுரிமைக்கு மதிப்பளியுங்கள். தயவு செய்து இந்த விஷயத்தில் தவறான தகவல்களை ஒளிபரப்புவதை நிறுத்துங்கள் என மீனா வேண்டுகோள் விடுத்திருந்தார். கணவரின் இறப்புக்கு பிறகு வெளியே தலைக்காட்டாமல் இருந்த நடிகை மீனாவை நடிகைகள்  சங்கீதா, ரம்பா, சங்கவி ஆகியோர் தங்களது குடும்பத்துடன் சென்று சமீபத்தில் சந்தித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியது. 






இந்நிலையில் சர்வதேச உடல் உறுப்பு தான தினத்தை முன்னிட்டு தனது உடல் உறுப்புகளை தானம் செய்துள்ளதாக மீனா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் அவர் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ஒருவர் உடலுறுப்பு தானம் செய்வது மூலம் 8 பேருக்கு மறுவாழ்வு கிடைக்கிறது. என் கணவர் வித்யாசாகருக்கு யாராவது  உறுப்புகள் தானம் செய்ய முன்வந்து இருந்தால் அவரது உயிர் காப்பாற்றப்பட்டு வாழ்க்கையே மாறியிருக்கும். 


இதன் முக்கியத்துவத்தை நான் உணர்ந்து கொண்டுள்ளேன். அதனால் எனது உடல் உறுப்புகளையும் நான் தானம் செய்கிறேன் என மீனா தெரிவித்துள்ளார். பலரும் மீனாவின் இந்த முடிவை பாராட்டியுள்ளனர். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண