நாடு முழுவதும் ஆகஸ்ட் 11, 12 தேதிகளில் ரக்ஷா பந்தன் விழா கொண்டாடப்பட்டது. இந்நிலையில் டெல்லியில் தன் சகோதரியிடம் ராக்கி கயிறு கட்டிக் கொள்ளச் சென்ற இளைஞர் ஒருவரின் உயிரைப் பறித்துள்ளது காத்தாடி விடும் மாஞ்சா கயிறு.
நடந்தது என்ன?
டெல்லி நக்லோய் பகுதியைச் சேர்ந்தவர் 35 வயதான விபின் குமார். இவர் ரக்ஷா பந்தன் அன்று தனது சகோதரியை சந்திக்க லோனி புறப்பட்டார். நகோலியில் இருந்து லோனிக்கு தனது இருச்சக்கர வாகனத்தில் அவர் புறப்பட்டார். அவர் பின்னால் அவரது மனைவி அமர்ந்திருந்தார். அப்போது அவர் சாஸ்திரி பார்க் ஃப்ளைஓவரில் சென்றபோது அவர் கழுத்தில் திடீரென ஏதோ ஒன்று பறந்துவந்து சுற்றியது. உடனே அவர் கழுத்தில் காயமேற்பட்டது. அவர் படுகாயங்களுடன் கீழே விழுந்தார். அவரது மனைவி உடனடியாக ஆம்புலன்ஸை வரவழைத்து கணவரை மருத்துவமனையில் அனுமதித்தார். ஆனால் அவரது கணவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
டெல்லியில் கடந்த ஒரு மாதத்தில் இரண்டு நபர்கள் மாஞ்சா கயிறால் கழுத்தறுபட்டு உயிரிழந்துள்ளனர்.
ரக்ஷா பந்தன் நாளில் தங்கையிடம் ராக்கி கயிறு கட்டிக்கொள்ளச் சென்றவரின் உயிரை மாஞ்சா கயிறு பறித்த சோகம் டெல்லிவாசிகளை ஆட்கொண்டுள்ளது.
முன்னதாக கடந்த மாதம் டெல்லி உயர் நீதிமன்றம் ஒரு உத்தரவை பிறப்பித்திருந்தது. அதில் டெல்லியில் தடை செய்யப்பட்ட சீன மாஞ்சா கயிறுகள் விற்பனையை தடுக்க வேண்டும் என்று போலீஸுக்கு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் மாஞ்சா கயிறு ஒரு இளைஞரின் உயிரைப் பறித்துள்ளது.
கடந்த 2016 ஆம் ஆண்டு முதலேயே டெல்லியில் மாஞ்சா கயிறுகளுடன் பட்டம் பறக்கவிட தடை நிலவுகிறது. 2016 ஆகஸ்ட் 15 அன்று இரண்டு குழந்தைகள் மாஞ்சா கயிறால் கழுத்தறுபட்டு உயிரிழந்தனர். இந்நிலையில் தான் இந்தத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மாஞ்சா நூல் தயாரிப்பதற்கு, ஜவ்வரியை ஒரு பானையில் நன்கு கொதிக்க வைத்து கலவை தயாரிக்கின்றனா். பின்னா் அதனுடன் கண்ணாடித் துகள்கள், வஜ்ரம், மயில் துத்தம், வண்ணப்பொடி ஆகிய பொருள்களை சோ்த்து நூலில் தடவுகின்றனா். இதன் பின்னரே சாதாரண நூல், மாஞ்சா நூலாக மாறுகிறது.
இதுமட்டுமல்லாமல் சந்தையில் சீன மாஞ்சா கயிறுகள் விற்கின்றன. இவை இன்னும் அதிக கண்ணாடி துகள்கள் கொண்டவையாக இருக்கின்றன. இவை கழுத்தில் பட்டால் உடனடியாக உயிர் பறிபோகிறது.
உயிர்களைக் காவு வாங்கும் மாஞ்சா கயிறுகள் நாடு முழுவதுமே பல்வேறு பகுதிகளிலும் தடை செய்யப்பட்டுள்ளன. இருந்தாலும் அங்கொன்றும் இங்கொன்றுமாக சட்டவிரோதமாக தயாரிக்கப்படும் மாஞ்சாக் கயிறுகள் உயிரைப் பறிக்கும் கயிறுகளாக மாறிவிடுகின்றன.