நடிகை மீனா இன்னும் 14 நாட்களில் தனது 13 ஆம் ஆண்டு திருமண நாளை கொண்டாடவிருந்த நிலையில் அவரது கணவர் உடல்நலக்குறைவால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
1976 ஆம் ஆண்டு செப்டம்பர் 16 ஆம் தேதி பிறந்த நடிகை மீனா 1982 ஆம் ஆண்டு நடிகர் திலகம் சிவாஜி நடித்த நெஞ்சங்கள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். குழந்தை நட்சத்திரமாக 45க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த அவர் 1990 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். அதன்பின் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் பல முன்னணி நடிகர்களுக்கும் ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்தார்.
“கண்ணழகி” என ரசிகர்களால் அழைக்கப்படும் மீனா கடந்த 2009 ஆம் ஆண்டு ஜூலை 12 ஆம் தேதி பெங்களூரைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளரான வித்யாசாகரை திருமணம் செய்துக் கொண்டார். இந்த தம்பதியினருக்கு நைனிகா என்ற மகள் உள்ளார். நைனிகாவை 2016 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான தெறி படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக மீனா திரையுலகிற்கு அறிமுகம் செய்தார்.
இதனிடையே கணவர் வித்யாசாகருக்கு ஏற்கனவே நுரையீரல் பாதிப்பு இருந்த நிலையில் இந்தாண்டு தொடக்கத்தில் அவரது குடும்பத்தில் அனைவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டது. இந்த தொற்றிலிருந்து மீண்டாலும் அவருக்கு நுரையீரல் பிரச்சனை தீரவேயில்லை.இது புறாவின் எச்சத்தை சுவாசிப்பதால் உடலினுள் பரவும் ஒருவித கிருமி பாதிப்பு காரணமாக நுரையீரலை தாக்கியது என கூறப்படுகிறது.
ஒருபுறம் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சைக்காக காத்திருந்த நிலையில்,மறுபுறம் வித்யாசாகருக்கு மாற்று அறுவை சிகிச்சை இல்லாமல் குணப்படுத்தும் முயற்சிகளும் நடந்து வந்தது. ஆனால் எதிர்பாராதவிதமாக சிகிச்சை பலனின்றி வித்யாசாகர் நேற்றிரவு உயிரிழந்தார். 48 வயதாகும் வித்யாசாகரின் மறைவு மீனாவின் ரசிகர்களையும், திரையுலகைச் சேர்ந்தவர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள நிலையில் பலரும் தங்கள் இரங்கல்களை சமூக வலைத்தளம் வாயிலாக மீனாவுக்கு தெரிவித்து வருகின்றனர்.
மேலும் மீனா இன்னும் 14 நாட்களில் தனது 13 ஆம் ஆண்டு திருமண நாளை கொண்டாடவிருந்த நிலையில் கணவரின் மரணம் அவரை மீளாத் துயரில் ஆழ்த்தியுள்ளது. அதேசமயம் கடந்தாண்டு திருமண நாளின் போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திருமண வரவேற்பில் எடுத்த புகைப்படத்தை பதிவிட்டு வானவில் போல என் வாழ்வில் வந்து அதை அழகாக வண்ணமயமாக்கினாய் என பதிவிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருந்தார். அவரின் இந்த பதிவு தற்போது வைரலாகியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்