தெலுங்கு சினிமா இயக்குநர்  ஏ.எஸ்.ரவிகுமார் சவுத்ரி, பொது மேடையில் நடிகை மன்னரா சோப்ராவுக்கு திடீரென முத்தமிட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


பிரியங்கா சோப்ராவின் உறவுக்காரர்


நடிகர் ராஜ் தருண் ஹீரோவாக நடிக்க இயக்குநர் ஏ.எஸ். ரவிகுமார் சௌத்ரி இயக்கும் திரைப்படம்  ‘திரகபதர சாமி’. டோலிவுட் ரொமாண்டிக் காமெடி படமாக இப்படம் உருவாகி வருகிறது.தமிழ் திரைப்படங்களான ‘சண்டமாருதம் ’, ‘காவல்’ ஆகிய படங்களில் நடித்த நடிகை மன்னரா சோப்ரா இப்படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். நடிகை பிரியங்கா சோப்ராவின் அப்பா வழி உறவுக்காரப் பெண்ணான மன்னரா சோப்ரா தற்போது இந்தி, தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் கவனம் செலுத்தி வருகிறார்.


இந்நிலையில், ‘திரபாதர சாமி’ படத்தின் டீசர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்ற நிலையில்,  இப்படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜூ, நடிகர், நடிகைகள், படக்குழுவினர் எனப் பலரும் கலந்துகொண்டனர்.


அத்துமீறிய இயக்குநர்


விழாவில் டீசரை தில் ராஜூ வெளியிட்ட நிலையில், தொடர்ந்து படக்குழுவினர் அனைவரும் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.


இந்நிலையில், புகைப்படங்களுக்கு நடிகை மன்னரா சோப்ரா இயக்குநர் ரவிகுமார் சௌத்ரி உடன் இணைந்து போஸ் கொடுத்தபோது திடீரென இயக்குநர் நடிகையின் கன்னத்தில் முத்தமிட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த நடிகை மன்னரா பின் சமாளித்து சிரித்து சமாளித்தபடி அந்த இடத்தில் இருந்து நகர்ந்தார்.


 






டோலிவுட் வட்டாரத்தில் இந்த நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், மன்னராவுக்கு இயக்குநர் முத்தம் கொடுத்த வீடியோ இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு கண்டனங்களைப் பெற்று வருகிறது.


நெட்டிசன்கள் கண்டனம்


நடிகை மன்னரா சோப்ராவில் அனுமதி இல்லாமல் இயக்குநர் முத்தமிட்டுள்ளது அப்பட்டமாக தெரிகிறது, மீ டூ புகார்கள் எழும் இந்த சூழலிலும் திரைத்துறையில் நடிகைகளின் மீதான அத்துமீறல்கள் தொடர்ந்து  கொண்டு தான் இருக்கிறது என இணையவாசிகள் இந்த வீடியோவைப் பகிர்ந்து கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.


மற்றொருபுறம், இது படத்துக்கான ப்ரொமோஷன் உத்தியாகவும் இருக்கலாம் எனவும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


இதேபோல் இந்த ஆண்டு தொடக்கத்தில் மலையாள பட ப்ரொமோஷன் பணிகளின்போது சட்டக்கல்லூரி மாணவர் ஒருவர் நடிகர் அபர்ணா பாலமுரளியிடம் அத்துமீறிய செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


‘தங்கம்’  பட ப்ரொமோஷனுக்காக எர்ணாகுளத்தைச் சேர்ந்த சட்டக்கல்லூரி ஒன்றுக்கு அபர்ணா பாலமுரளி சென்ற நிலையில், அவரை பூங்கொத்து கொடுத்து வரவேற்க மேடைக்குச் சென்ற மாணவர் வரம்பு மீறி அபர்ணாவின் தோள் மீது கைபோட்டு ஃபோட்டோ எடுக்க முயற்சித்து அதிர்ச்சியில் ஆழ்த்தினார். இச்சம்பவம் இணையத்தில் கடும் எதிர்ப்புகளைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.